அமெரிக்க வான்படையின் 'ஆபரேஷன் எபிக் ப்யூரி' (Operation Epic Fury) திட்டத்தின் கீழ், கடந்த சில நாட்களாக ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் சிறிய ரக வேகப்பந்துப் படகுகள் மற்றும் கண்ணிவெடி வைக்கும் கப்பல்களை ஏ-10 வார்தாக் விமானங்கள் வேட்டையாடி வருகின்றன. மார்ச் 20, 2026 நிலவரப்படி, சுமார் 120 ஈரானிய கடற்படைக் கப்பல்கள் மற்றும் 44 கண்ணிவெடி கப்பல்களை இந்த விமானங்கள் அழித்துள்ளதாக அமெரிக்காவின் கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் (Gen. Dan Caine) தெரிவித்துள்ளார். வழக்கமாக நிலப்பரப்பில் உள்ள டாங்கிகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் இந்த விமானம், தற்போது கடல் பரப்பில் ஈரானின் 'சுவர்ம்' (Swarm) எனப்படும் கும்பல் தாக்குதல் யுக்தியை முறியடிக்கப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தின் மிக முக்கிய பலம் அதன் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள 30 மி.மீ 'கேட்லிங் கன்' (GAU-8/A Avenger Gatling Gun) ஆகும். ஒரு நிமிடத்திற்கு 3,900 முதல் 4,200 ரவுண்டுகள் வரை சுடக்கூடிய இந்த ராட்சத துப்பாக்கி, ஈரானின் சிறிய ரகக் கப்பல்களை நொடிப் பொழுதில் துவம்சம் செய்துவிடுகிறது. மேலும், இந்த விமானம் ஏபிபிகேடபிள்யூஎஸ் (APKWS) எனப்படும் லேசர் வழிகாட்டி ஏவுகணைகள் மற்றும் ஜிபிஎஸ் மூலம் இயங்கும் நவீன குண்டுகளை (JDAM/GPS Bombs) சுமந்து சென்று, எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குகின்றன. குறிப்பாக, ஒரு கூட்டமாக வரும் ஈரானியப் படகுகளைக் கொத்தாக அழிக்க 'கிளஸ்டர் பாம்' (Cluster Bombs) எனப்படும் கொத்து குண்டுகளும் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
ஏ-10 வார்தாக் விமானம் மற்ற போர் விமானங்களை விடத் தனித்துவமானது. இது மிக மெதுவாகவும், தரைக்கு மிக அருகிலும் (Low and Slow) பறக்கும் வல்லமை கொண்டது. இதனால் கடலில் மறைந்திருக்கும் சிறிய படகுகளைக் கூட பைலட்டுகளால் எளிதாகக் கண்டறிந்து நீண்ட நேரம் அங்கேயே வட்டமிட்டுத் (Loiter time) தாக்க முடிகிறது. மேலும், இதன் காக்பிட் பகுதி 'டைட்டானியம் குளியலறைத் தொட்டி' (Titanium Bathtub) போன்ற கவசத்தால் பாதுகாக்கப்படுகிறது. இதனால் ஈரானியப் படகுகள் திருப்பித் தாக்கினாலும், எவ்வித பாதிப்புமின்றி இந்த விமானத்தால் தொடர்ந்து போரிட முடியும். இதன் காரணமாகவே, ஓய்வு பெற வேண்டிய நிலையில் இருந்த இந்த விமானங்களுக்கு அமெரிக்க அரசு தற்போது நவீன மேம்பாடுகளைச் செய்து போர்க்களத்தில் இறக்கியுள்ளது.
தற்போது ஹார்முஸ் நீரிணையை மூடி உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைத் தடுக்க ஈரான் முயன்று வருகிறது. இதனை முறியடிக்க, அமெரிக்கா தனது அபாச்சி ஹெலிகாப்டர்களுடன் இணைந்து வார்தாக் விமானங்களை இரவு பகலாகப் ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது. "ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை எங்களது வேட்டை தொடரும்" என்று பென்டகன் எச்சரித்துள்ளது. வான்வெளியில் எஃப்-35 விமானங்கள் ஈரானின் ரேடார்களைத் தகர்க்க, கடல் மட்டத்தில் இந்த வார்தாக் விமானங்கள் ஈரானின் கடற்படையை நிலைகுலையச் செய்து வருகின்றன. இந்த அதிரடி மாற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
