TVK கட்சி தலைவர் விஜய், எந்த நம்பிக்கையில் பெரம்பூர் தொகுதியை தெரிவு செய்தார் என்று தெரியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் இன்று (30) அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட, ஆர்.டி. சேகர் சுமார் 1 லட்சத்து 6,000 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெறும் 50,000 வாக்குகளை மட்டுமே பெற்று படு தோல்வியடைந்தார். தலித் இன மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் வாழும் இந்த தொகுதி பக்கமே தலை வைத்துப் படுக்க அதிமுக விரும்பவில்லை. அது 2021ல் ஏற்பட்ட தோல்வியால், பெரம்பூர் தொகுதி என்றாலே அதிமுகவுக்கு அலர்ஜி.
இந்த நிலையில், ஆர்.டி. சேகர் அங்கே மீண்டும் போட்டியிடுகிறார் என்று அறிந்த உடனே, அதிமுக இந்த தொகுதியை பமக கட்சிக்கு தள்ளிவிட்டது. விடயம் புரியாத அன்புமணி ராமதாஸ் ஏதோ இந்த தொகுதியில் வெல்ல முடியும் என நினைத்து, கட்சி பொருளாளர் திலகபாமாவை களம் இறக்கியுள்ளார். இது இவ்வாறு இருக்க, TVK தலைவர் விஜய் அவர்களுக்கு தலித் மக்களிடையே தற்போது நல்ல செல்வாக்கு இருக்கிறது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
மேலும் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக பெரம்பூர் உள்ளதால், சிறுபான்மை வாக்குகளும் விஜய் பக்கம் சாயும். இதனால் விஜய் சுமார் 25,000 வாக்கு வித்தியாசத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ சேகரை வெல்வார் என்பது நிச்சயம். விஜய்க்கு 1 லட்சத்து 40,000 வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. TVK தலைவர் விஜய் போடும் கணக்கு, பல வழிகளில் அவர் கட்சிக்கு சாதகமாக தான் சம்பவங்களை நகர்த்தி இருக்கிறது. அந்த வகையில் திருச்சி கிழக்கில் விஜய்க்கு என்ன செல்வாக்கு இருக்கிறதோ, அதனை விட பெரம்பூரில் அவருக்கு செல்வாக்கு அதிகம்.
இதேவேளை விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதால், ஏனைய கட்சிகள் தமது பிரபலமான வேட்பாளர்களை இந்த தொகுதியில் நிறுத்த மாட்டார்கள். இதனால் விஜய் அடிக்கடி கூறுவது போல, பெரம்பூரில் DMK - TVK கட்சிக்கு இடையே தான் மோதல். இது போக விஜய் பெரம்பூரில் போட்டியிட உள்ளதால், அங்கே உள்ள இளைஞர்கள் மிகவும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பல இடங்களில் TVK கொடி, ப்ளக்ஸ் என்று எல்லாமே பக்காவாக கொடி கட்டிப் பறக்கிறது.
