அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்வைத்த 15 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான 'பிரஸ் டிவி' (Press TV) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் "அளவுக்கு அதிகமானது மற்றும் ஒருதலைப்பட்சமானது" என்று ஈரான் விமர்சித்துள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt), "பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; அவை ஆக்கப்பூர்வமாக உள்ளன" என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய இலக்குகளை எட்டுவதற்கு "மிக நெருக்கமான நிலையில்" (Very close to meeting core objectives) இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது நிராகரிப்போடு நிற்காமல், பதிலுக்கு 5 அம்ச எதிர்த் திட்டத்தை (Counterproposal) முன்வைத்துள்ளது. இதில் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பெரும் தொகையை இழப்பீடாக (Reparations) வழங்க வேண்டும் மற்றும் ஹார்முஸ் நீரிணையின் முழு இறையாண்மையை ஈரான் வசம் ஒப்படைக்க வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அமெரிக்காவோ ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடுதல் மற்றும் ஏவுகணைத் தயாரிப்புகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளில் உறுதியாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த நிபந்தனைப் போர், அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசினாலும், மறுபுறம் அமெரிக்கா தனது ராணுவ அழுத்தத்தைக் குறைக்கவில்லை. ஈரான் இந்த ஒப்பந்தத்தை ஏற்கத் தவறினால், அந்நாடு இதுவரை கண்டிராத அளவிலான "மிகக்கடுமையான தாக்குதல்களை" (Unleash hell) அமெரிக்கா நடத்தும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 82-வது ஏர்மிபார்ன் டிவிஷன் வீரர்கள் மற்றும் கூடுதல் மரைன் படைகள் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளன. இந்த ராணுவ நகர்வுகள், ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைப்பதற்கான ஒரு தந்திரமாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவும் இந்தச் சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 100 டாலருக்கும் கீழ் வந்துள்ளது. ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு வரும் மார்ச் 27-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பாகிஸ்தான் அல்லது துருக்கியில் இந்த வார இறுதியில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடங்க வாய்ப்புள்ளதாக ஐநா அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 'ஆஃப்-ரேம்ப்' (Off-ramp) எனப்படும் வெளியேறும் வழி ஈரானுக்குப் பிடிக்குமா அல்லது போர் தரைப்படைத் தாக்குதலாக மாறுமா என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும்.
=