ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய வணிகத் துறைமுகமான ஒடேசாவில் (Odesa) இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட கொடூர ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கினியா-பிசாவ் (Guinea-Bissau) நாட்டின் கொடியுடன் இயங்கி வந்த ‘எம்வி கோல்டன் லியோ’ (MV Golden Leo) என்ற அந்த வணிகக் கப்பலில் இந்தியா மற்றும் சிரியாவைச் சேர்ந்த மொத்தம் 17 மாலுமிகள் பணியாற்றினர். அவர்களில் 5 பேர் இந்தியர்கள் ஆவர். ஒடேசா துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றிச் சென்ற இக்கப்பல் மீது மூன்று ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக உக்ரைனிய கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோக சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “வணிகக் கப்பல்களையும், எந்தப் பாவமும் அறியாத அப்பாவி மாலுமிகளையும் இலக்கு வைத்துத் தாக்குவது கண்டிக்கத்தக்கது; சர்வதேச கடல்சார் வணிகம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என வெளியுறவுத் துறைத் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த இந்திய மாலுமிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய அரசு, படுகாயமடைந்த மாலுமி விரைவாகக் குணமடைய தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறது. உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தற்போதைய சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதோடு, உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிடவும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.