அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தார் அரச குடும்பத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 400 மில்லியன் டாலர் மதிப்பிலான போயிங் 747 சொகுசு விமானத்தில் அயர்லாந்திற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்த விமானத்தில் இன்னும் முழுமையான ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு மேம்பாடுகள் (Anti-missile Countermeasures) நிறுவப்படாத நிலையில், பாதுகாப்புப் கவலைகளுக்கு மத்தியிலும் டிரம்ப் அதில் பயணிக்க முடிவெடுத்திருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அயர்லாந்து செல்லும் டிரம்ப், டப்ளினில் அரசு அதிகாரிகளைச் சந்திப்பதுடன், டூன்பெக்கில் (Doonbeg) உள்ள தனது சொந்த கோல்ஃப் மைதானத்தில் நடைபெறும் தொடரிலும் பங்கேற்கவுள்ளார். கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, ஈரானிய அச்சுறுத்தல் காரணமாக இந்த கத்தார் விமானத்திலிருந்து டிரம்ப் இரகசியமாக வேறொரு பாதுகாப்பான விமானத்திற்கு மாற்றப்பட்டார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் இந்த விமானத்தில் மேற்கொள்ளும் முதல் சர்வதேசப் பயணம் இதுவேயாகும்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்த விமானம் மிக பிரம்மாண்டமானது; அக்டோபர் மாதத்தில் சுமார் 60 நாட்கள் இதற்கான முழுமையான உயர்மட்டப் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன” எனத் தெரிவித்தார். இருப்பினும், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் காரணமாக, இந்த மேம்பாட்டுப் பணிகள் தள்ளிப்போடப்பட்டு வரும் சூழலிலேயே, தற்போதைய குறைகளுடன் கூடிய பாதுகாப்பு சூழலிலேயே டிரம்ப் பயணிக்கவுள்ளார்.
அமெரிக்க அதிபர்களுக்கான பாரம்பரிய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானங்கள் பழமையானதாக மாறியதை அடுத்து, கத்தார் அளித்த இந்த விமானம் அவசர அவசரமாகச் சேவையில் இணைக்கப்பட்டது. ஆனால், ஒரு வெளிநாட்டு அரசால் வழங்கப்பட்ட ஆடம்பர சொகுசு விமானத்தைப் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக நிறைவடையும் முன்பே அதிபர் பயன்படுத்துவது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்ததா என்ற கேள்விக்கு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், அரசுப் பதவிக்குப் பின் இந்த விமானத்தைத் தனது அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக டிரம்ப் கூறியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.