நம்புயா, எங்க அம்மா சத்தியமா நான் ரவுடி தான்’… ‘வந்ததுக்கு ஒரு 50 ரூபா கொடு’யா’… நகைக்கடையில் ரவுடிக்கு நடந்த பரிதாபங்கள்!

ஒரு படத்தில் வடிவேலு, நான் ரவுடி தான், எனச் சத்தியம் செய்யாத குறையாக மன்றாடுவார். அதே போல நிஜத்திலும் ரவுடி ஒருவர் மன்றாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வேலூர் சவலன்பேட்டையைச் சேர்ந்த காலாசா என்பவர் மதுபோதையில் கத்தியுடன் அங்கிருந்த நகைக்கடை ஒன்றிற்குச் சென்றுள்ளார். உள்ளே சென்ற காலாசா, நகை கடை உரிமையாளரிடம் எனக்கு மாமூல் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அந்த கடையில் உரிமையாளர் சற்றும் அசைந்து கொடுக்காமல் இருந்துள்ளார். அப்போது காலாசா, என் கையில் இருக்கும் கத்தியைப் பார்த்தும் உனக்குப் பயம் வரவில்லையா, நான் ரவுடி எனக் கொந்தளித்துள்ளார்.

ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத அந்த நகைக்கடை உரிமையாளரிடம், இனிமேல் மிரட்டினால் கதை நடக்காது என கடையேறி வந்ததிற்காவது ஒரு 50 ரூபாய் கொடுங்கள் என கெஞ்சியுள்ளார். ஆனால் என்ன வேண நடக்கட்டும், என்கிட்ட இருந்து ஒரு பைசா கூட தர முடியாது என தீர்மானமாக இருந்து விட்டார் அந்த கடையின் உரிமையாளர்.

இதனால் மனம் வெறுத்து சோகத்தில் ஆழ்ந்த காலாசாவை அங்கு வந்த மற்றொரு நபர் ரவுடி காலாசாவுக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனிடையே, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வரும் காலாசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.