உள்ளாடைகளை திருடிய நண்பர்.. ஆத்திரத்தில் கொலை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது உள்ளாடைகளைத் திருடி அணிந்ததாகக் கூறி நண்பர் ஒருவரை தொழிலாளி ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார். பாதிக்கப்பட்டவர் பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த விவேக் சுக்லா. இவர்கள் இருவரும் கான்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவர்கள், தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர்.

சுக்லா, அஜய் குமாரின் உள்ளாடைகளை திருடி அதனை அணிந்துகொண்டு பிராங்க் செய்ய முயன்றுள்ளார். இதனை அஜய் குமார் அறிந்ததும் கோபத்தில் சுக்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் நடந்ததாக சக ஊழியர்கள் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுக்லாவை அஜய்குமார் பலமுறை குத்தியுள்ளார். பின்னர், அஜய் குமார் அங்கிருந்து ஓடியுள்ளார்.

கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த சுக்லாவை சக ஊழியர்கள் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து கான்பூரில் உள்ள லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் சுக்லாவை பரிசோதித்த மருத்துவர்கள் சுக்லா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அஜய் குமாரின் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அவரைக் கைது செய்ய தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

சுக்லா பணியாற்றி வந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பிற நண்பர்களையும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சுக்லாவின் குடும்பத்தினருக்கு அவரது மரணம் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.