காதலனோடு சென்னை வந்த ஸ்ருதி ஹாசன் – யார் இந்த சாந்தனு ஹசாரிகா?

பிப்ரவரி 26 அன்று, ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலன் என்று கூறப்படும் சாந்தனு ஹசாரிகாவுடன் சென்னை வந்தடைந்தார். சென்னையை அடைந்ததும், தனது நெருங்கிய தோழியும் ஆடை வடிவமைப்பாளருமான அம்ரிதா ராமை சந்தித்திருக்கிறார். அப்போது சாந்தனு மற்றும் அம்ரிதாவுடன் ஸ்ருதி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. ஸ்ருதியின் இந்தக் காதல் பற்றிய பகிர்வுக்குப் பிறகு, சென்னைக்கு ஸ்ருதியுடன் சாந்தனு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களாக, ஸ்ருதிஹாசன் தனது காதலன் என்று கூறப்படும் சாந்தனு ஹசாரிகாவுடனான செய்திகளும் புகைப்படங்களும் வைரலாகி வந்தன. சமீபத்தில், சாந்தனுவும் அவருடைய நண்பர்களும் ஸ்ருதிக்கு ஓர் சர்ப்ரைஸ் பிறந்தநாள் விருந்து அளித்தனர். இதனை மிகவும் உருக்கமாக சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி பதிவிட்டார். இந்தக் கொண்டாட்டத்தின் ஏராளமான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அவை வைரலாகப் பகிரப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26), ஸ்ருதிஹாசன் சாந்தனுவுடன் சென்னை வந்தடைந்தார். சாந்தனுவுடன் ஒரு கடையிலிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் இன்ஸ்டன்ட்டாகப் பகிர்ந்தார். மேலும், சாந்தனு ஒரு துணிக்கடையில் ஸ்ருதியையும் அமிர்தா ராமையும் அணைத்திருப்பதைப் போன்ற புகைப்படமும் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, ஸ்ருதி ஹாசனுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் வகை முறுக்கு என்பதைப் பல நேர்காணல்களில் பதிவு செய்திருக்கிறார். சென்னை வந்தடைந்ததும் தன் நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதமாக ஆசை தீர முறுக்கு சாப்பிட்டவர், அதனை க்ளிக் செய்து, “என் கால்கள் மேஜிக் சென்னையின் தரையைத் தொடட்டும். அப்படியே முறுக்கு சாப்பிடலாம்” என்ற கேப்ஷனையும் சேர்த்திருந்தார்.

ஸ்ருதியின் தற்போதைய காதலன் என கிசுகிசுக்கப்படும் சாந்தனு ஹசாரிகா, குவஹாத்தியைச் சேர்ந்தவர். அவர், டூடுல் கலைஞர், இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் ஒரு ராப்பரும் கூட. சாந்தானு 2014 டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞர் என்றும் பட்டத்தை வென்றார். மேலும், அவர் வடகிழக்கு இந்தியாவில் கலை சமூகமாக இருக்கும் GAP – Gauhati Art Project-ன் இணை நிறுவனரும்கூட.