அப்பாவான யோகி பாபு,குட்டி யோகி பாபு உலகிற்கு உதயம்

கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகரான யோகி பாபுவுக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தனர். இந்நிலையில் அவரோ யாருக்கும் சொல்லாமல் மஞ்சு பார்கவி என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்..

தானும், மஞ்சு பார்கவியும் மாலையும், கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனக்கு திருமணமானதை அறிவித்தார்
யோகி பாபு.

இப்படி யாருக்குமே சொல்லாமல் திருமணம் செய்து கொண்டீர்களே, உங்கள் திருமணத்தை நேரில் பார்க்க ஆசையாக இருந்தோமே என்று பலரும் யோகிபாபுவிடம் கேட்டார்கள். அதற்கு அவரோ, ஊரையே கூட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் கனவு. ஆனால் திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தவிர்க்க முடியாத குடும்ப சூழலால் திருமணத்தை இப்படி நடத்த வேண்டியதாகிவிட்டது என்றார்.

திருமணத்திற்கு தான் அழைக்க முடியவில்லை அதனால் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தப் போகிறேன் என்றார் யோகி பாபு. வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து அழைப்பு வைத்தார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடியாமல் போனது. கொரோனா பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த மஞ்சு பார்கவி இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகி பாபு அப்பாவான செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.