30 நிமிட வாக்குவாதம் மோடியின் காலில் விழுந்த சசி- தினகரனை போட்டியிட வேண்டாம் என்றார் !

அரசியலைவிட்டு தாம் ஒதுங்கியதைப் போல அமமுக பொதுச்செயலாளர் தினகரனையும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என வலியுறுத்தினாராம் சசிகலா. ஆனால் சசிகலாவின் இந்த யோசனையை நிராகரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தினகரன் என்கின்றன அமமுக வட்டாரங்கள். அதிமுக பொதுச்செயலாளர் தாமே என உரிமை கோரி தாம் தொடர்ந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சசிகலா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் சசிகலா தீவிர அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அமமுக தனித்து நின்றால் அதிமுகவின் வாக்கு சதவீதம் பாதிக்கும்; ஆகையால் சசிகலா- அமமுக என அனைவரையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என டெல்லி பாஜக நெருக்கடி கொடுத்தது. ஆனால் அதிமுக தலைமை இந்த நெருக்கடியை முற்றாக நிராகரித்தது. இந்த பஞ்சாயத்தால் அதிமுக- பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு இழுபறியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் சசிகலா, தினகரன் இருவரையும் அரசியலைவிட்டே ஒதுங்கி இருக்கும் நடவடிக்கைகளையும் டெல்லி பாஜக ஏவிவிட்டது. இதன் முதல் கட்டமாகத்தான் சசிகலா தமது அரசியலுக்கு குட்பை என்கிற அறிக்கை நேற்று இரவு வெளியானது.

ஜெயா டிவிக்குதான் முதலில் இந்த அறிக்கையை சசிகலா அனுப்பினார். இதனையடுத்து பதறியடுத்து சசிகலாவை சந்திக்கப் போனார் தினகரன். அப்போது இப்படி ஒரு அறிக்கையை ஏன் வெளியிடனும்? எதனையும் எதிர்கொள்வோம் என தினகரன் கூறியிருக்கிறார். அப்போது, நீயும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இரு. எல்லா பிரச்சனையும் தானே சரியாகிவிடும் என சசிகலா சொல்லி இருக்கிறார். இதனை நிராகரித்த தினகரன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

தினகரன் எவ்வளவோ தடுத்து வாதிட்டுப் பார்த்தும் சசிகலா தமது அறிக்கையை அனைத்து ஊடகங்களுக்கும் கொடுத்துவிட்டார். இதனால் சசிகலா நிலைப்பாடு தொடர்பாக இரவோடு இரவாகவே செய்தியாளர்களிடம் பேசினார் தினகரன். அப்போது சசிகலாவின் முடிவால் மட்டுமல்ல தமக்கும் வேறு வகையில் நெருக்கடி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அவரது சமாளிப்பு பேட்டி அமைந்திருந்தது.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களிடம் நாம் பேசிய போது, சசிகலா இப்படி ஒரு அறிக்கை விடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்னமும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் தினகரன் கட்சிக்கு கணிசமான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை விருப்ப மனு வாங்க வந்த கூட்டம் வெளிப்படுத்தி இருக்கிறது. இதனால் அடுத்த முக்கிய அறிவிப்பு தினகரன் தரப்பில் இருந்து வரலாம்.

அது சசிகலா சொன்னதாக சொல்லப்படும் தினகரன் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற அறிவிப்பாகவும் இருக்கலாம். அல்லது தலைகீழ் திருப்பமாக தினகரனைத் தவிர அமமுகவினர் அனைவரையும் ஏற்கிறோம் என அதிமுக தரப்பின் அறிவிப்பாகவும் இருக்கலாம் என்றார்.