ஏன் யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசெல்லாம் இப்படி தான் போகுதா’?…’மனைவியின் பொறியில் சிக்கிய கணவன்’… உறவினர்கள் புடைசூழ வீட்டுக்குள் நடந்த பூஜை!

திருமணத்திற்குப் பிறகு, அந்த வாழ்க்கையிலிருந்து முறை தவறிச் சென்றால், அதன் விளைவுகள் என்ன மாதிரி இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளது இந்த சம்பவம்.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி மாவட்டம் கொத்தக்குடாம் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் ராஜுபாய். இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது திருமணத்தின் போது வரதட்சணையாக 5 லட்ச ரூபாய் ரொக்கமும், பங்களா வீடு ஒன்றும் கொடுக்கப்பட்டது. இருவரது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், அதன் பயனாக 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் கொரோனா காலத்தில் ராஜுபாய் சரிவர வீட்டிற்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி அவரிடத்தில் கேட்ட நிலையில், அதற்குச் சரியான பதிலைச் சொல்லாமல் தட்டிக் கழித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்ட ராஜுபாய், நீ எப்போதும் என்னிடத்தில் சண்டை போடுகிறாய், எனவே நான் வீட்டிற்கு வர மாட்டேன் எனக் கோபித்துக் கொண்டு ராஜுபாய் சென்று விட்டார்.

ராஜுபாயின் மனைவியும், கணவர் கோபத்தில் சென்று இருக்கிறார், கோபம் தீர்ந்ததும் வீட்டிற்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் அந்த நம்பிக்கை விரைவிலேயே நீர்த்துப் போனது. கோபித்துக் கொண்டு சென்ற கணவன், ஏதாவது நண்பர் கூடவோ, அல்லது ஏதாவது அறை எடுத்துத் தங்கி இருப்பார் என நினைத்த ராஜுபாயின் மனைவிக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்தது.

அதில், ராஜுபாய் அதே பகுதியில் திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் ரகசியமாகத் தங்கி இருப்பதாகத் தெரியவந்தது. இதைக் கேட்டதும் முதலில் அதிர்ச்சியில் உறைந்து போன ராஜுபாயின் மனைவி, பின்னர் தனது கணவருக்குத் தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார். இதையடுத்து ராஜுபாய் எந்த வீட்டில் அந்த பெண்ணுடன் தங்கி இருக்கிறார் என்பதை ரகசியமாகக் கண்காணித்த அவர், ராஜுபாயை கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்தார்.

அதனடிப்படையில் தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்த ராஜுபாயின் மனைவி, உறவினர்கள் புடை சூழ ராஜுபாய் தங்கியிருந்த வீட்டின் கதவைச் சென்று தட்டியுள்ளார். நடக்கப்போவது எதையும் அறியாத ராஜுபாய், ஜாலியாக வந்து கதவைத் திறந்துள்ளார். அப்போது அவரது மனைவி அவரது உறவினர்கள் புடைசூழ நிற்பதைப் பார்த்து வெலவெலத்து போனார்.

இதையடுத்து அதிரடியாக உள்ளே நுழைந்த ராஜுபாயின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள், ராஜுபாய் மற்றும் அவரது திருமணமாகாத புதிய காதலி என இருவரையும், எந்த வித தயவு தாட்சணை பார்க்காமல் செருப்பால் செமத்தையாக பூஜை செய்தனர். நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து குடும்பத்தை நடத்தினால், அந்த பணத்தைக் கொண்டு வந்து இங்க கொடுக்கிறாயா என, கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு பின்னி பெடல் எடுத்தார் ராஜுபாயின் மனைவி.

அதோடு அங்கு வந்த உறவினர்களும் அவர்கள் பங்கிற்கு லெப்ட் ரைட் வாங்கினார்கள். அடிக்குப் பயந்து கிச்சனுக்குள் ஓடிய ராஜுபாயின் புதிய காதலிக்கும், ராஜுபாயின் மனைவியிடம் இருந்து செருப்பால் அர்ச்சனை கிடைத்தது. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்துக் கொண்டு செய்கிற காரியமா இது என அங்கு வந்த உறவினர்கள் வசை பாட, இருவரையும் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று ஒப்படைத்தார்கள்.

கணவனின் திருமணத்தை மீறிய உறவை மனைவியே கண்டுபிடித்து அவரை இருவரையும் நையப்புடைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.