விடுதலைப்புலிகளின் நினைவு தினத்தை அனுஷ்டித்தால், அவர்களை புகழ்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; எம்.பி.பதவிகூட பறிபோகும்?

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினாலோ அல்லது விடுதலைப்புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படவுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது.,

நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து பேசினால் அவர்களின் எம்.பி பதவியைக்கூட இரத்து செய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்கவும் ஆராயப்படுகின்றது.

ஜெர்மனியில் எவ்வாறு நாஷி கட்சி பற்றியோ, ஹிட்லர் பற்றியோ பேசினால் அங்கு எவ்வாறு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ, அதேபோன்று இலங்கையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டாலும் கூட அவர்களின் கொள்கை இன்னமும் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரதிநிதிகள் இன்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

எனவே இவற்றைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.