ஜெகஜோராக நடந்த திருமணம்’… ‘திடீரென கூட்டத்திலிருந்து எழும்பிய பெண்ணை பார்த்ததும் பதறிய மாப்பிள்ளை’… இரு வீட்டாருக்கும் காத்திருந்த ட்விஸ்ட்!

7 வருடக் காதலை மறந்த இளைஞருக்குத் திருமண நாளில் நடந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபர், அங்குள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 7 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்த வாலிபருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை வில்லிவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. இதில் வாலிபரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துமுடிந்தது. இதற்கிடையே 7 வருடம் காதலித்த காதலனுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருப்பதை அறிந்த இளம்பெண் அதிர்ந்து போனார்.

உடனே இளம்பெண் தனது உறவினர்களிடம் நடந்த விஷயத்தைக் கூற, அனைவரும் அந்த இளைஞரிடம் சென்று எதற்காக எங்கள் பெண்ணை ஏமாற்றினாய் என்பது குறித்துக் கேட்கக் கிளம்பினார்கள். வில்லிவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மணமகன் மணமேடையில் அமர்ந்திருந்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண் எழுந்து வருவதைப் பார்த்த அந்த இளைஞர் அதிர்ந்துபோனார்.

தனது காதலியைத் திருமண மண்டபத்தில் எதிர்பார்க்காத அந்த இளைஞர் என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நின்றார். அப்போது மணமேடைக்கு அருகே வந்த இளம்பெண், தாங்கள் இருவரும் காதலர்கள் எனவும், நாங்கள் காதலித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அவர் கொண்டு வந்த புகைப்படங்களை இருவீட்டாரிடமும் காண்பித்து, காதலனின் திருமணத்தை நிறுத்தும்படியும், தன்னை அவருடன் சேர்த்து வைக்கும்படியும் கூறி வாக்குவாதம் செய்தார்.

இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த பெண்ணோடு வந்த அவரது உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து அந்த இளம்பெண்ணின் காதலனுக்கு நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணம் நின்று போனதால் மணமகனின் குடும்பத்தார் சோகத்தோடு அங்கிருந்து வெளியேறினார்கள். மணமகனின் உறவினர்கள் அந்த பெண்ணின் உறவினர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.