பங்கு மக்களே பாஜகவில் இந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க’… ‘சர்ச் நிர்வாகம் விடுத்த வேண்டுகோள்’… அதற்காக அவர்கள் சொல்லும் காரணம்!

பாஜகவுக்கு வாக்களிக்க சர்ச் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செப்பாட் பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இது கி.பி. 1050-ம் ஆண்டுக் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்நிலையில் தேவாலயம் அமைந்துள்ள சாலை விரிவாக்க பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து வந்தது.

சாலை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் சாலையோரம் உள்ள தேவாலயத்தை இடிக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இது தேவாலய நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேவாலய இடுப்பிற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேவாலயத்தை இடிக்கும் உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்று மாநிலத்தை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (எல்டிஎஃப்), எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (யுடிஎஃப்) தேவாலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் அந்தக் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தை அறிந்த கேரள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.பாலசங்கர், பிரச்சினையில் தலையிட்டு சுமுகமாகத் தீர்த்து வைத்துள்ளார். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்த பாலசங்கர், அந்த தேவாலயம் குறித்தும், அதன் 1000 ஆண்டுகள் பழமை குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

அதன்படி இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் தேவாலயத்தைப் பார்வையிட்டு இது ஆயிரம் ஆண்டுக் கால பழமையானதுதான் என்று சான்றளித்தனர். தேசிய நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேவாலயத்தை இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஆயிரம் ஆண்டுக் கால பழமையான தேவாலயம் காப்பாற்றப்பட்டது.

இதுகுறித்து தேவாலயத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஜான்ஸ் ஆப்ரஹாம் கோனட் கூறும் போது, “இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யார் யாரிடமோ நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். ஆனால் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் எங்களைக் கைவிட்டுவிட்டனர். ஆனால் பாஜக தலைவரான பாலசங்கர் உடனடியாக எங்களுக்கு உதவி செய்து தேவாலயம் இடிபடுவதைத் தவிர்த்தார்.

இந்த சிறப்புமிக்க தேவாலயமானது, கி.பி.1050-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த தேவாலயத்தில் 13-ம் நூற்றாண்டின் 47 சுவரோவியங்கள் உள்ளன. எனவே இந்த தேவாலயத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றிய பாலசங்கருக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செங்கனூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிகிறோம். அவர் போட்டியிடும்பட்சத்தில் அவருக்குக் கிறிஸ்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

அப்படி வாக்களிக்காமல் போனால் நாம் நன்றி மறந்தவர்களாகி விடுவோம். எனவே கிறிஸ்தவர்கள் அனைவரும் பாலசங்கருக்கு ஆதரவு தரவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.