லலிதா ஜூவல்லரியில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 கோடிக்கு மேல் பணம் சிக்கியது!

லலிதா ஜூவல்லரி உட்பட சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இரண்டு நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனையில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜூவல்லரி நிறுவனமான லலிதா ஜூவல்லரி மற்றும் சிவ் சாஹய் சன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 27 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் 4ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சென்னை, மும்பை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதனிடையே இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறையின் நிர்வாக அமைப்பான மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்புடைய ஐடி சோதனையில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 1.2 கோடி ரூபாய் ரொக்கமாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லலிதா ஜூவல்லரி தொடர்பாக கூறுகையில், அந்த நிறுவனம் கணக்கிடப்படாத தங்க கொள்முதல், தவறான கடன் கணக்கு காட்டுதல், பழைய நகைகளின் சேதாரம் போன்றவற்றில் மோசடி செய்ததும், உள்ளூர் பைனான்சியர்களிடமிருந்து கடன் பெறுதல், திருப்பி செலுத்துதல், பில்டர்களுக்கு ரொக்கமாக கடன் அளித்தல், ரியல் எஸ்டேட்டில் முதலீடு போன்ற செயல்களில் ஈடுபடிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சிவ் சாஹய் சன்ஸ்-ல் அதன் கிளைகளிலிருந்து போலி ரொக்க வரவு, வாங்குதலுக்கான முன்கூட்டியே என்ற போர்வையில் போலி கணக்குகளில் பண வரவு; பண மதிப்பிழப்பு காலத்தில் விவரிக்கப்படாத பண வரவு போன்ற மோசடிகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக CBDT தெரிவித்துள்ளது.