மீனின் வயிற்றில் நீர் ஆமையா? இதுவரை நடக்காத ஆச்சரியம்.. திகைத்துப் போன ஆராய்ச்சியாளர்கள்!

மீனுக்கு இரையான ஒரு குட்டி நீர் ஆமை ஒன்று எந்தவித சேதமும் இல்லாமல் மீனின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மீன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த உயிரியலாளர் உதவியால் இந்த ஆமை காப்பாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து FWC ஃபிஷ் அண்ட் வைல்ட்லைப் ரீசர்ச் இன்ஸ்டிடியூட் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு லார்ஜ்மவுத் பாஸ் (largemouth bass) என்ற மாமிச மீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது உயிரியலாளர்கள் மீனின் வயிற்று பகுதியில் ஏதோ ஒன்று விசித்திரமாக இருப்பதைக் கண்டனர்.

உயிரியலாளர் அதன் வயிற்றை திறந்து பார்த்தபோது ஒரு சிறிய ஆமை ஒன்று உயிருடன் இருப்பதை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தார். இந்த நிலையில் அந்த ஆமையின் புகைப்படத்தையும் சமூக ஊடகத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் FWC வெளியிட்ட பதிவில், “ஒரு நன்னீர் உயிரியலாளரின் புல குறிப்புகள்: ஆமை பேரழிவைத் தவிர்ப்பது!” என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ” சூரியன் உதயமாகி அதன் வெளிச்சம் புளோரிடா எவர்லேட்ஸின் புல்வெளி நீரின் மேல் பிரதிபலிக்க ஆரம்பித்த நேரம். எஃப்.டபிள்யூ.சி உயிரியலாளர்கள் தங்கள் படகுகளைத் செலுத்தி லார்ஜ்மவுத் பாஸ் மீனை பிடிக்க ஆயத்தமாகினர்,” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மீன்களை பிடித்த பிறகு அவற்றை உயிரியலாளர் தங்கள் ஆய்வகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, ஒரு மீனில் மட்டும் அசாதாரணமான ஒன்றை அவர்கள் கவனித்தனர். அதாவது, மீன்களை ஆய்வக பெஞ்சில் வைத்து பிறகு அதனை உயிரியலாளர்கள் அளவிட்டுள்ளனர். மேலும் அவற்றின் திசு மாதிரிகளை எடுத்துக் கொண்டனர். இதையடுத்து ஓட்டோலித்ஸை சேகரிப்பார்கள், அன்றைய தினம் சேகரித்த அனைத்து பாஸ் மீன்களின் பாலினத்தையும் தீர்மானிக்க சோதனை நடத்தி வந்தனர். அப்போது ஒரு உயிரியலாளர் மட்டும் ஒரு குறிப்பிட்ட மீனின் வயிற்றின் உள்ளே எதோ ஒரு அசைவு இருப்பதை கவனிக்கிறார்.

இதனை தொடர்ந்து, உயிரியலாளர் மீனின் வயிற்றை கவனமாக வெட்டியுள்ளார். பிறகு கண்ட காட்சி தான் அனைத்து உயிரியலாளர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் எந்த வித பாதிப்பும் இன்றி மாமிச மீனின் வயிற்றில் உயிருடன் நீர்ஆமை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ஒரு லார்ஜ்மவுத் பாஸ் மீனின் வயிற்றில் சிக்கிய உயிரிகள் உயிருடன் இருந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த பதிவு நெட்டிசன்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஆமைக்கு எந்தவித சேதமும் இன்றி அதனை காப்பாற்றிய உயிரியலாளருக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக உணவு மற்றும் தோலுக்காக ஆமைகள் கொல்லப்படுகின்றன.

ஆமையில் இருந்து பெறப்படும் எண்ணெய் மூலம் மருந்து பொருட்கள், வாசனை திரவியங்கள், சோப்புகள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் ரத்தம் மூல நோய்க்கு மருந்தாகவும், ஆமைகளின் ஓடுகள் அலங்கார பொருட்கள் மற்றும் காலணிகள் செய்ய பயன்படுத்தபடுகிறது. இதன் காரணமாக ஆமைகள் இனங்களை அழிவில் இருந்து பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.