பள்ளி ஆசிரியரை மறுமணம் செய்த அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி!

அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி, பள்ளி ஆசிரியரை மறுமணம் செய்து கொண்டார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மானைவியும், உலகின் பணக்கார பெண்மணியாகவும் விளங்கும் மெக்கன்ஸி ஸ்காட், சீயாட்டிலைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரை திருமணம் செய்துள்ளார்.

1994ம் ஆண்டில் அமேசான் நிறுவனத்தை தொடங்கும் முன்பாகவே 1993ம் ஆண்டு ஜெஃப் பெசோசை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் மெக்கன்ஸி ஸ்காட். இருவரும் இணைந்தே அமேசான் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். மேலும் அமேசான் நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்தில் அதன் முதல் ஊழியர் குழுவில் மெக்கன்ஸியும் ஒருவர். திருமணமாகி 26 ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்திற்காக அமேசான் பங்குகளில் 25% அளவை ஜெஃப் பெசோஸ், மெக்கன்ஸிக்கு அளித்தார். இதன் மூலம் 2019ல் உலகின் 21வது பெரும் பணக்காரராகவும், உலகின் பணக்கார பெண்மணிகளில் 3வதாகவும் மெக்கன்ஸி மாறினார். இவர் மிகப்பெரிய நன்கொடையாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார்.

இந்நிலையில் மெக்கன்ஸி, சீயாட்டிலைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான டான் ஜூவெட்டை மறுமணம் செய்திருக்கிறார். Giving Pledge என்ற அமைப்புக்கு எழுதிக்கொடுத்த உறுதிப்பத்திரம் வாயிலாக இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மகிழ்ச்சியான தற்செயலான ஒரு நிகழ்வில், எனக்குத் தெரிந்த மிகவும் தாராளமான மற்றும் கனிவான ஒருவரை நான் திருமணம் செய்து கொண்டேன். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக மகத்தான நிதியை அளிக்கும் உறுதிப்பாட்டில் மெக்கன்ஸியுடன் இணைகிறேன் என்று டான் தெரிவித்தார்.

2019ல் 53 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவராக விளங்கிய மெக்கன்ஸி தனது சொத்தில் இருந்து பாதியளவுக்கு நன்கொடை அளிப்பதாக உறுதியளித்திருந்தார். 2020ல் நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களுக்கு $5.8 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்து கடந்த ஆண்டில் அதிக நன்கொடை அளித்த தனி நபர் என்ற பெருமையை பெற்றார். டிசம்பர் 2020 நிலவரப்படி மெக்கன்ஸியின் சொத்து மதிப்பு 62 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.