தம்பி, தலைக்கு மேல என்ன கோழி கொண்டை’… ‘காவல் ஆய்வாளர் செய்த அதிரடி செயல்’… ‘சார், நீங்க வேற லெவல்’… குவியும் பாராட்டு!

படிக்கின்ற வயதில் ஸ்டைல் என நினைத்துக் கொண்டு சுற்றிய சிறுவனுக்கு நல்ல பாடம் புகட்டிய காவல் ஆய்வாளரின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

பலரது வாழ்க்கையில் பதின் பருவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த பருவத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியே என்று தோன்றும். பதின் பருவத்தில் தங்களது குழந்தைகள் தடம் மாறி சென்று விடக்கூடாது என்பதே பெரும்பாலான பெற்றோரின் பெரும் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் இது தான் செம ஹேர்ஸ்டைல் எனச் சுற்றிக் கொண்டு இருந்த சிறுவனுக்கு நல்ல பாடம் புகட்டியுள்ளார் காவல் ஆய்வாளர் ஒருவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் மஹராஜா கடை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் சிறுவன் சுற்றிக் கொண்டு இருந்துள்ளான். இதைப் பார்த்த காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், அந்த சிறுவனை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது அந்த சிறுவன் காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைல் வைத்திருந்தான்.

அதாவது தலையின் பின் பக்கத்தில் ஒரு இடத்தில் மட்டும், பனங்காயை அரிவாளால் கொத்தி விடுவார்களே, அதுபோல அந்த சிறுவன் தலை இருந்தது. மேலும் அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் கத்தாழை மேடு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது. சிறு வயதில் அதிலும் படிக்கின்ற வயதில் இதுபோல அலங்கோலமான ஹேர் ஸ்டைல் உனக்குத் தேவையா என நொந்துபோன காவல் ஆய்வாளர், சிறுவனை உடனே சலுயூன் கடைக்கு அழைத்துச் சென்று ஒழுங்காக முடி திருத்தும் செய்து அனுப்பி வைத்தார்.

மேலும் தம்பி, இது படிக்கின்ற வயது. இந்த வயதில் படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்து. இது தான் ஸ்டைல் என நினைத்துக் கொண்டு ஊதாரித்தனமாகச் சுற்றினால் உனது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். இதெல்லாம் ஒரு நாள் சந்தோசம் மட்டுமே, அதற்காக உனது கனவுகளைத் தொலைத்து விடாதே என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை காப்பதோடு எங்களது பணி முடிந்து விட்டது என இருக்காமல், சிறுவன் விஷயத்தில் காவல் ஆய்வாளர் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. சமூகவலைத்தளங்களில் ஆய்வாளர் கணேஷ்குமாரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.