இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா என்ன செய்யப்போகிறது தெரியுமா?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா தவிர்க்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தவாரம் இலங்கை தொடர்பாக கோர் குழுவால் நகர்த்தப்படவுள்ள தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கும் சாத்தியம் இல்லை என உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான அமைப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள திருத்தங்கள் அடங்கிய பிரேரணை அண்மையில் சில ஊடகங்களினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதில், அரசியல் தீர்வு காணவும், இலங்கையில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவரவும் 2009 மே 26 அன்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆகியோரால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் தண்டித்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள்உட்பட அனைத்து தரப்பினரும் இலங்கையில் செய்த அனைத்து மீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை குறித்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானத்தை தோற்கடிக்க 47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.