அப்படி என்ன அந்த இளைஞர் கேள்வி கேட்டார்?’…’தல அஜித்’ ஸ்டைலில் பாடம் புகட்டிய கமிஷனர்’… வைரலாகும் கமிஷனர் சொன்ன பதில்!

பொதுமக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் காதலுக்கு உதவி கேட்ட நிகழ்வும், அதற்கு கமிஷனர் சொன்ன பதிலும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் காவல்துறை ஆணையராக பணியாற்றி வருபவர் அமிதாப் குப்தா. இவர் அவ்வப்போது ட்விட்டர் நேரலை மூலமாகப் பொதுமக்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்பது வழக்கம். அவ்வாறு பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அதற்கான தீர்வையும் அளித்து வருகிறார்.

அந்த வகையில் ட்விட்டர் நேரலையிலிருந்த அமிதாப் குப்தாவிடம், பெண்கள் பாதுகாப்பு, தலைக்கவசம் பயன்பாடு, பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை உள்ளிட்டவை தொடர்பாகப் பொதுமக்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துக் கொண்டு இருந்தார். அப்போது லைவில் வந்த இளைஞர், ”ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை ஏற்றுக்கொள்ள உதவி செய்யுமாறு” காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஆணையர் அமிதாப் குப்தா, பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களைத் தொல்லை செய்யக் கூடாது என அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் ‘நோ மீன்ஸ் நோ’ என்ற வசனத்தைக் கூறி பாடம் எடுத்தார். நேர்கொண்ட பார்வை படம், நடிகர் அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.

இதுகுறித்து அந்த இளைஞரிடம் பேசிய ஆணையர், ”துரதிருஷ்டவசமாகப் பெண்ணின் சம்மதம் இல்லாமல், எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது. நீங்களும் அந்த பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது. அந்த பெண் ஒருநாள் உங்களின் காதலை ஏற்றுக்கொண்டால், எங்களின் வாழ்த்தும், ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். ‘நோ மீன்ஸ் நோ’, என ஆணையர் பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.