பாகிஸ்தான் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ், பிஐஏ என்று எழுதப்பட்ட பலூன் விமானம்: இராணுவத்தை முட்டாளாக்கிய தருணம்!

ஜம்மு காஷ்மீர் கிராமம் ஒன்றில் வந்திறங்கிய விமானம் போன்ற வடிவமைக்கப்பட்ட பலூனில் பாகிஸ்தான் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் அதாவது PIA என்று எழுதியிருந்தது, இந்த பலூன் விமானம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஒரு விமானம் போலவே இந்த பலூன் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஜன்னல்கள், இறக்கைகள், என்று பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த பலூன் விமானம் இருந்தது.

ஹிராநகர் செக்டார் பகுதியில் சோட்ரா சக் கிராமத்தில் இந்த பலூன் விமானம் இறங்கியது. இந்த பலூனை போலீஸார் உடனடியாக கைப்பற்றினர்.

இந்த பிஐஏ பலூன் விமானப் புகைப்படம் வெளியானவுடன் சமூக ஊடகங்களில் பல்வேறு ருசிகர கருத்துக்களுடன் வைரலானது.

ஒரு நெட்டிசன், ‘இந்த பலூன் விமானத்தை பாகிஸ்தான் ஏவியேஷன் டெக்னாலஜி என்று மியூசியத்தில் பாதுகாக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். பலரும் மீம்களுக்கான புதிய பொருள் கிடைத்து விட்டது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இன்னும் ஒருவர் ‘என் பையன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த பலூனை திருப்பிக் கொடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

சோட்ராசக் கிராமத்தில் இந்த வெள்ளை, பச்சை நிற பலூன் விமானத்தை கண்ட உள்ளூர் வாசிகள் உடனே போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

ராஜ்பாக் போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலூனைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அங்கு அரசியல் தலைவர்கள் மெஹ்பூபா முப்தி உட்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி 14 மாத கால காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.