லண்டனில் பெண் படுகொலை; பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் சந்தைப்படுத்துதல் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தவர் சாரா எவரார்டு (வயது 33). கடந்த 3ந்தேதி தெற்கு லண்டனில் கிளாபம் காமன் என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டார். அதன்பின்னர் அவர் காணாமல் போனார்.

அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டதில் கடந்த புதன்கிழமை உயிரிழந்த அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதன்பின்னர் கிளாபம் காமன் பகுதியில் மக்கள் அமைதியாக திரண்டு, சாராவின் நினைவாக மலரஞ்சலி செலுத்தி சென்றனர்.

இதேபோன்று இளவரசர் வில்லியம்சின் மனைவி மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் இளவரசியான கேத் மிடில்டனும் சாராவின் நினைவிடத்தில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த சம்பவத்தில், வெய்ன் காவுஜென்ஸ் என்ற போலீசார் சாராவை கடத்தி படுகொலை செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றவாதிகள், சமூக தலைவர்கள் மற்றும் லண்டன் குடியிருப்புவாசிகள் நடந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து கண்டனமும் வெளியிட்டனர்.

போலீசாரின் கடும் நடவடிக்கை என தெரிந்ததும், சாரா நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்று அஞ்சலி செலுத்த தொடங்கினர். கொரோனா பரவும் சூழலில் இது ஏற்புடையதல்ல என நீதிமன்றம் எச்சரித்தது. போலீசாரும், மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி வலியுறுத்தி கேட்டு கொண்டனர்.

எனினும் சாராவின் படுகொலை நாடு முழுவதும் தேசிய அளவில் பரபரப்புடன் பேசப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும்…, இன்னும் எத்தனை பேர்… போன்ற கோஷங்களை கூட்டத்தினர் எழுப்பியபடி சென்றனர்.

இதேபோன்று, பொது இடங்களில் தொடர்ச்சியாக வன்முறை மற்றும் துன்புறுத்துதலை சந்தித்து வரும் பெண்களுக்கு ஆதரவாக அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடியது. நேற்று நாள் முழுவதும் கிளாபம் பகுதியில் மக்கள் குவிந்தனர்.

கொரோனா தடுப்பு விதிகளை மீறி இரவிலும் மக்கள் அதிகளவில் திரண்டனர். இதனால், போலீசார் அந்த பகுதிக்கு சென்று மக்களை எச்சரித்தனர். விதிமீறலில் ஈடுபடுகிறீர்கள். அதனால், உடனடியாக கலைந்து செல்லுங்கள் என கூறினர்.

எனினும், கூட்டம் கலையவில்லை. இதனால் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்த போலீசார், கலைந்து செல்லுங்கள். இல்லையெனில் கைது நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், திரண்டிருந்தவர்களில் பெண்களை போலீசார் கட்டாயப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மற்றவர்களை கைது செய்தனர். இதனால், கூட்டத்தினர், நீங்கள் உங்களை கைது செய்து கொள்ளுங்கள். யாரை நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இங்கிலாந்து முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கட்சி வேற்றுமையின்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். போலீசார் கடுமையான முறையில் நடந்திருக்கின்றனர் என ஒப்புகொண்டனர்.

லண்டன் மேயர் கான், போலீசாரின் நடவடிக்கைகளை பற்றிய முழு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர், கிளாபம் பகுதியில் காணப்படும் காட்சிகள் ஆழ்ந்த வேதனையடைய செய்கிறது. போராட்டத்திற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கும் வழி இதுவல்ல என கூறியுள்ளார்.

சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர்கள், மாநகர காவல் ஆணையாளர் கிரெஸ்சிடா டிக் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி கோஷமிட்டனர்.

இதேபோன்று இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல், ஆன்லைனில் பரவி வரும் சில வீடியோக்கள் கவலை அளிக்கின்றன. இந்த சம்பவத்தில் நடந்த விசயங்களை பற்றிய முழு அறிக்கையை அளிக்கும்படி மாநகர காவல் துறையிடம் கேட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

எனினும், போலீசார், குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றங்கள் 2021 மசோதாவை பட்டேல் அறிமுகப்படுத்தி உள்ளார். இது அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை அழிக்கும் என விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.