வட்டக்கச்சியில் கொலை செய்த மாணவன் வீட்டிற்கு தீ: கொல்லப்பட்டவரின் மனைவி, சகோதரி மீது பொலிசார் தாக்குதல்!

வட்டக்கச்சி பகுதியில் கடந்த10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியான அருளம்பலம் துஷ்யந்தன் மீது கத்தியால் குத்திய நபரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு,

இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்மீது பொலீஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை பத்து மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் சந்தேக நபர்களின் வீட்டில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு உறவினர்கள் பொலீஸாரின் பாதுகாப்புடன் சென்ற நிலையில் இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பொலீஸார் போதுமான
நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து பொலீஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதன் போதே பொலீஸார் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் கத்தி குத்து மேற்கொண்டவரின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது.
தீயினை பொலீஸார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை பொலீஸாரின் தாக்குதலுக்குள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.