“சீக்கிரம் எல்லாரும் குப்புற படுங்க…” போட்டிக்கு நடுவே நிகழ்ந்த ‘பரபரப்பு’.. சிறிது ‘நேரம்’ தடைபட்ட ‘மேட்ச்’… ‘வைரல்’ வீடியோ!!

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே தற்போது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் விழுந்தாலும், ஏழாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த பந்தாரா மற்றும் ஹசரங்கா ஆகியோர் சிறப்பாக ஆடி, ஓரளவுக்கு இலங்கை அணி, சிறந்த ஸ்கோரை எட்ட உதவினர். இறுதியில், ஐம்பது ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், டேரன் பிராவோ சதமடித்து அசத்த, 49 ஆவது ஓவரில் இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த போட்டிக்கு நடுவே நடந்த செயல் ஒன்று, சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

இலங்கை அணி 38 ஆவது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் தேனீக்கள் வலம் வர ஆரம்பித்துள்ளது. அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டி, பேட்ஸ்மேன்கள், ஃபீல்டர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் உடனடியாக மைதானத்தில் குப்புற படுத்துக் கொண்டனர்.

இதனால், போட்டிக்கு நடுவே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தேனீக்கள் கூட்டம் சென்ற பின்பு, போட்டி மீண்டும் நடைபெற்றது.