இது தான் எங்களோட மாஸ்டர் ஸ்ட்ரோக்’… ‘எங்களோட வெற்றி எப்படி இருக்கும்ன்னு மட்டும் பாருங்க’… டாக்டர் ராமதாஸ்!

அதிமுக, பாமக வாக்குறுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெகு விரைவில் தாக்கல் செய்யவிருக்கும் சாதிவாரி மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அனைத்து சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் விகிதாச்சார இடப்பங்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கையும், நோக்கமும் ஆகும். இதைத் தான் நான் கடந்த 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இதை பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் பா.ம.க.வின் நிலைப்பாடு

ட்டை, தமிழகத்தை ஆளும், ஆளப்போகும் அ.தி.மு.க. அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது தமிழகம் முழுமையான சமூகநீதி வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருப்பதையே காட்டுகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பா.ம.க.வின் கொள்கை. அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் எந்த வாக்குறுதியும் இடம் பெறவில்லை.

பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வேளாண்மை, நீர் மேலாண்மை, மகளிர் நலன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வி‌ஷயங்களிலும், பா.ம.க.வின் கொள்கையை ஒட்டிய நிலைப்பாட்டை அ.தி.மு.க. எடுத்திருப்பதும், ஆக்கப்பூர்வ வாக்குறுதிகளை அளித்திருப்பதும் மக்களின் மனங்களைக் கவரக்கூடியவை.

அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்படும். அனைவரின் ஆதரவையும் ஈர்ப்பதன் மூலம் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரப் போவது உறுதி” எனத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.