அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார்: பொலிஸ் அதிகாரி கொலை செய்யபட்ட ஹிரன் மன்சுக்குடன் 10 நிமிடம் பேசினார்!

பிரபல தொழில் அதிபரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை வீ்ட்டு அருகே கடந்த மாதம் 25-ந் தேதி சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்த காரில் சோதனை நடத்தியதில் 20 ஜெலட்டின் குச்சிகள் சிக்கின. மேலும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கும் மிரட்டல் விடுக்கும் கடிதமும் சிக்கியது.இந்த வழக்கில் மர்ம முடிச்சு அவிழும் முன் வெடிகுண்டுடன் சிக்கிய காரின் உரிமையாளர் என கருதப்படும் தானேயை சேர்ந்த ஆட்டோ உதிரிபாக வினயோகஸ்தர் ஹிரன் மன்சுக்(வயது48) கடந்த 5-ந் தேதி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால் வழக்கில் புதிய சர்ச்சை ஏற்பட்டது.

இந்தநிலையில் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு சிக்கிய வழக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு ஏற்றது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி மும்பை குற்ற புலனாய்வு பிரிவில் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சச்சின் வாசே என்ற அதிகாரியை என்.ஐ.ஏ. அதிரடியாக கைது செய்தது.அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் வழக்கு விசாரணைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கைதான சச்சின் வாசேக்கு சொந்தமான கார் ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், பணம் எண்ணும் எந்திரம் மற்றும் சில துணிகளையும் கைப்பற்றினர்.

அம்பானி வீட்டு அருகே நின்ற வெடிகுண்டு கார், அங்கு செல்லும் போது அதன் பின்னால் சச்சின் வாசேயின் கார் சென்று உள்ளது. மேலும் இந்த காரை சச்சின் வாசேயே ஓட்டியுள்ளார். இதுதவிர வெடிகுண்டுடன் காரை நிறுத்திய டிரைவரை இவர் தனது காரில் ஏற்றிக்கொண்ட அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளிச்சமாகி உள்ளது.

ஆனால் என்.ஐ.ஏ. வழக்கை கையில் எடுக்கும் வரை, மும்பை போலீசார் வழக்கை திசை திருப்பி வந்ததாக கூறப்படுகிறது. வழக்கை தவறாக கையாண்ட விதம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது அரசு அதிருப்தி அடைந்தது. இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இதனால் இந்த வழக்கு அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் அழைத்து விசாரித்தார்.

இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக நமும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். மாநில போலீஸ் வட்டாரத்தில், இது தண்டனைக்குரிய பதவியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவிடம் இருந்து மேலும் இரண்டு சொகுசு கார்களை என்.ஐ.ஏ. நேற்று கைப்பற்றியது. கார்களில் ஒன்றான பிராடோ, ரத்னகிரியைச் சேர்ந்த சிவசேனா நிர்வாகி விஜய்குமார் கணபத் போஸ்லே பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ்.

இதற்கிடையில், சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த என்.ஐ.ஏ மற்றும் ஏ.டி.எஸ் விசாரணையில் பிப்ரவரி 17 அன்று, ஹிரன் மன்சுக் மற்றும் வாசே ஆகியோர் கோட்டையில் ஜி.பி.ஓ அருகே மெர்சிடிஸில் 10 நிமிடபேசிக்கொண்டு இருந்ததாக தெரிய வந்துள்ளது.ஹிரன் மன்சுக் தனது ஸ்கார்பியோ முலுண்ட்-அய்ரோலி சாலையில் பழுந்தடைந்ததாக கூறி, ஓலா வண்டியில் தெற்கு மும்பைக்குச் சென்றுள்ளார்.