தேர்தல் பிரசாரத்தில் கமலைப் பின்பற்றும் கவுதமி; கொஞ்ச நாளிருந்தாலும் புத்தி வந்திடுமில்ல!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பல்வேறு திரைபிரபலங்கள் மும்முரமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதன்முறையாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதால் அத்தொகுதியில் முகாமிட்டு மக்களை சந்தித்து வருகிறார். மேலும் அவர் தனது அரசியல் பிரசாரங்களுக்கு செல்லும் போது அதிகம் தனி ஹெலிகாப்டரையே பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து ஒரு முறை கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் எப்படி ஆடுகிறேன் என்பதை பார்க்காதீர்கள் பந்து எங்கே போய் விழுகிறது என்று பாருங்கள் என பதில் கூறியிருந்தார்.

கமல்ஹாசனுக்கு பிக்பாஸில் பணம் வருவது தான் அவரது ஹெலிகாப்டர் பயணத்துக்கு காரணம் என்று சீமான் விமர்சித்திருந்தார். இந்நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான நடிகை கவுதமி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். இதன் மூலம் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசனை பின்பற்றுகிறாரா கவுதமி என்ற கேள்வி எழுகிறது.

பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வரும் நடிகை கவுதமி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ராஜபாளையம் தொகுதியில் தீவிரமாக களப்பணியாற்றி வந்தார். அத்தொகுதியில் அவருக்கு பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் கவுதமி.