கட்டையால் தாக்கி பெண் படுகொலை; நண்பர் கொன்று விட்டார்; ஏன் தெரியுமா?

பெங்களூருவில் வீடு புகுந்து கட்டையால் தாக்கி பெண்ணை படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெண் கொலை

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பீர்மா(வயது 42). இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பீர்மாவின் சொந்த ஊர் யாதகிரி மாவட்டம் ஆகும். பெங்களூருவில் தங்கி இருந்து அவர் கட்டிட வேலை செய்து வந்தார். பீர்மா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரது மகன் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

பீர்மாவின் மகன் வழக்கம் போல வேலைக்கு சென்றிருந்தார். இதனால் பீர்மா வீட்டில் தனியாக இருந்தார். இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய மகன், தனது தாய் தலையில் பலத்தகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக அவர் பரப்பனஅக்ரஹாரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

நண்பருக்கு வலைவீச்சு

போலீசார் விரைந்து வந்து பீர்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பீர்மாவை கட்டையால் தாக்கி மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கணவர் பிரிந்து சென்ற பின்பு பீர்மாவுக்கு, யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த மெகபூப் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வந்துள்ளார். இதனால் மெகபூப்பும், பீர்மாவும் நண்பர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது வீட்டுக்கு மெகபூப் வாரம் ஒரு முறை வந்து சென்றதும் தெரிந்தது.

மேலும் பீர்மா, மெகபூப் இடையே ஏற்பட்ட தகராறில், இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் பீர்மாவை மெகபூப் எதற்காக கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. தற்போது அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இதுகுறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மெகபூப்பை வலைவீசி தேடிவருகிறாா்கள்.