காணாமல் போன 2 சகோதரிகளின் உயிரற்ற உடல்கள் வயல்வெளியில் கண்டெடுப்பு; பெரும் பரபரப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை அவசர கதியில் எரித்ததாக எழுந்த குற்றச்சாட்டும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள பிலிபிட் என்ற மாவட்டத்தின் பில்சண்டா பகுதியில் உள்ள வயல்வெளிக்கு அருகில் 20 வயது இளம் பெண் மற்றும் அவரது 17 வயது சகோதரி இருவரின் உயிரற்ற உடல்களும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை மாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் சகோதரிகள் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர்கள் இரவு முழுவதும் தேடி அலைந்துள்ளனர். இதையடுத்து நள்ளிரவில், 17 வயது சிறுமியின் உடல் வயல்வெளிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெண்ணின் உடல் சற்று தொலைவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியோடு ஆதாரங்களை சேகரித்தனர். சம்பவ இடத்தில் ஒரு மொபல் போன் கிடைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பெண்களின் பெற்றோர்கள் யார் மீதும் சந்தேகம் தெரிவிக்காததால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.