பிரிந்து வாழ்ந்த மனைவியுடன் கள்ளத்தொடர்பு; வீடு புகுந்து வாலிபர் குத்திக் கொலை!

பெங்களூருவில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல் திருமணம்

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா லோகிதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரத், கூலித் தொழிலாளி. இவரது மனைவி வினுதா. இவரது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே அருகே ஒசஹள்ளி கிராமம் ஆகும். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு பரத்தும், வினுதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு லோகிதஹள்ளியில் தம்பதி வசித்து வந்தனர்.

இதற்கிடையில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பரத்துடன் வாழ பிடிக்காமல் வினுதா பிரிந்து சென்று விட்டார். பெங்களூரு அருகே பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆந்திரஹள்ளியில் வினுதா வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வினுதாவுக்கும், தரிகெரேயை சேர்ந்த சிவக்குமார் (வயது 26) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளத்தொடர்பு

அதாவது வினுதாவும், சிவக்குமாரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்காக முன்பாகவே அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. பரத்தை திருமணம் செய்த பின்பு வினுதா லோகிதஹள்ளிக்கு வந்து விட்டதால், அந்த பழக்கம் முறிந்து விட்டது. இதற்கிடையில், பெங்களூருவுக்கு வேலை தேடி சிவக்குமார் சிக்கமகளூருவில் இருந்து வந்திருந்தார். அப்போது வினுதாைவ சந்தித்து பேசி இருந்தார். கணவரை பிரிந்து அவர் வாழ்ந்து வந்ததால், வினுதாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதுடன், வீட்டுக்கு அடிக்கடி வந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி பரத்திற்கு தெரியவந்தது. உடனே அவர், தனது மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடும்படி சிவக்குமாரிடம் கூறி இருந்தார். ஆனால் சிவக்குமார் வினுதாவுடன் இருந்த கள்ளத்தொடர்பை கைவிடமறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சிவக்குமாரை கொலை செய்ய பரத் திட்டமிட்டதாக தெரிகிறது. இதற்காக சிவக்குமாரின் நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்.

குத்திக் கொலை

இந்த நிலையில, நேற்று முன்தினம் இரவு வினுதாவின் வீட்டுக்கு சிவக்குமார் சென்றுள்ளார். கள்ளக்காதலனுக்காக இறைச்சி வாங்குவதற்காக வினுதா கடைக்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் சிவக்குமாருக்கு தெரியாமல் பரத் வீட்டுக்குள் நுழைந்ததுடன், கட்டிலுக்கு அடியில் சென்று படுத்து கொண்டதாக கூறப்படுகிறது. கடையில் இருந்து வீட்டுக்கு வந்த வினுதா சிவக்குமாருடன் சிறிது நேரம் பேசிவிட்டு குளியலறைக்குள் சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் குளியலறை கதவை பரத் வெளிப்புறமாக பூட்டியுள்ளார். பின்னா் சிவக்குமாருடன் அவர் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவக்குமாரை, பரத் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். பின்னர் குளியலறை கதவை திறந்து விட்டு பரத் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

தொழிலாளி கைது

இதுபற்றி பேடரஹள்ளி போலீசாருக்கு, வினுதா தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது வினுதாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், சிவக்குமாரை பரத் கொலை செய்தது தெரியவந்தது.

அதே நேரத்தில் தலைமறைவாக இருந்த பரத்தை போலீசார் கைது செய்தார்கள். இதுகுறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான பரத்திடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பேடரஹள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.