குடும்பத்தகராறில் மனைவியின் கை விரல்களை வெட்டி வீசிய கணவர்!

மத்திய பிரதேசத்தின் பெத்துல் மாவட்டத்தில் ஒருவர் தனது மனைவியின் கட்டைவிரலையும் அவரின் மூன்று விரல்களையும் துண்டித்துவிட்டார். இந்த கொடூரமான சம்பவம் கடந்த வியாழக்கிழமை அதிகாலை பெத்துல் சிச்சோலி கிராமத்தில் அரங்கேறியுள்ளது.

ராஜு வன்ஷ்கர் என்ற நபர் அவருடைய மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழன் அன்று வழக்கம் போல கணவன் – மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறுக்கு பின்னர் மனைவி தூங்கிய நேரம் பார்த்து, ஆத்திரத்தில் இருந்த அவருடைய கணவர் கோடாரி ஒன்றினால் கை கட்டை விரல் ஒன்றை வெட்டியுள்ளார். ஆத்திரம் தீராத அந்த கணவர், அவர் மனைவியின் மற்றொரு கையில் 3 விரல்களையும் துண்டாக்கியுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கணவரை கைது செய்தனர். காயத்தால் துடித்த மனைவியை போபாலில் உள்ள ஹமிதியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

முன்னதாக கடந்த மார்ச் 22ம் தேதி மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் இதே போல குடும்ப பிரச்னை ஏற்பட்டு மனைவியின் கையை கணவர் துண்டாக்கி அவரை காட்டுப்பகுதியில் தனித்து விட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் கொடூர குற்றச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நடைபெற்று கொண்டிருக்கும் குற்ற நிகழ்வுகளை கண்டித்து இது போன்ற கொடூரச் செயலில் ஈடுபடுபவர்களை தண்டிக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும் என தெரிவித்தார்.

 

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 15 நாட்களில் இதுபோன்ற மூன்று துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மாநிலத்தில் அரங்கேறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மூன்று சகோதரிகளின் கைகளை தங்கள் கணவர்களே வெட்டியது மிகக் கொடூரமான குற்றம். வேறு யாராவது தாக்கினால், அது ஒரு குற்றம், ஆனால் அது கணவனாக இருக்கும்போது, ​​அது நம்பிக்கையின் கொலை.” என குறிப்பிட்டார்.