ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மிகக்குறைந்த விலையில் ஏழைகளின் பசியைப் போக்கிவந்த கோயம்புத்தூர் கமலாத்தாள் பாட்டிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கமலாத்தாள் என்பவர், ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு பசியாற வேண்டும் என்பதற்காக விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறார்.
இலாபம் ஈட்டுவதில் அவர் அக்கறை காட்டவில்லை மற்றும் மற்றவர்கள் வயிறார சாப்பிட வேண்டும் என மனதில் கொண்டு தனது சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்” என கமலாத்தாள் (Kamalathal) குறித்து ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) புகழ்ந்திருந்தார்.
தனது சேவை பெரிய அளவில் விரிவுப்படுத்த வேண்டும். அதற்காக தனது சொந்த இடத்தை கொஞ்சம் பெரிதாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். தற்போது அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் சொந்தமாக நிலம் வாங்கி பதிவு செய்ய உதவியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்த நிலத்தில் வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஏறக்குறைய ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பதிவு போட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கமலாத்தாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, அவருக்கு சொந்த வீடு கட்டித்தர ஆனந்த் மஹிந்திரா முன்வந்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,, “விரைவில் “இட்லி அம்மா” (Idli Amma) அவர்கள் சொந்தமான ஒரு வீட்டைப் பெறுவார்” என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்டார்.