கணவர் கண் எதிரே 3 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட மனைவி; மேலும் செய்த அக்கிரமம்!

ஆக்ராவில் 19 வயது இளம் பெண் ஒருவர் அவரின் கணவர் கண் எதிரிலேயே 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று இருவரின் ஆடைகளை களைந்து, இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியதுடன் அவர்களிடமிருந்து பணம், பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின்படி, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 19வயது இளம் பெண் மற்றும் அவரின் கணவர் என இருவரும் கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில் இருசக்கர வாகனம் ஒன்றில் ஆக்ராவில் உள்ள அவர்களின் வீட்டில் இருந்து ஃபிரோசாபாத்தில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஜார்நா நலா எனும் பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தங்களின் வாகனத்தை வழிமறித்து அவர்களை தாக்கியதுடன், சாலையோரமாக இருந்த சலேசர் காட்டுப்பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவரின் ஆடைகளையும் கழற்றச் செய்ததுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். இதன் பின்னர், கணவரின் கண் எதிரிலேயே அவருடைய 19 வயது மனைவியை மூவரும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து பணம், மற்றும் பொருட்களையும் பறித்துக்கொண்டு நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு இருவரையும் அங்கிருந்து போகச் சொல்லியுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்புணர்வு

வீட்டுக்கு வந்த பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் ஏத்மாபூர் காவல்நிலையத்துக்கு சென்று எழுத்துப்பூர்வ புகாரையும் அளித்திருக்கின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரின் இருவரின் விவரங்களையும் அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி சம்பவத்தில் ஈடுபட்டது ஆக்ராவின் ஷாதரா பகுதியைச் சேர்ந்த கவுரி ராஜ்புத், மோனு ஆகிய இருவர் என தெரியவந்துள்ளது, மூன்றாவது நபர் குறித்த விவரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை. மேலும் பாலியல் வன்புணர்வு செய்ததை அவர்கள் வீடியோவாகவும் எடுத்ததாக அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆக்ரா வடக்கு காவல் கண்காணிப்பாளர் சத்யஜீத் குப்தா கூறுகையில், “ மூவர் மீதும் கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும். தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்களை கூற இயலாது எனவும் பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Contact Us