யாழில் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் யாழ். நகரில் வர்த்தக நிலையங்கள், வீடுகள் உட்பட சில இடங்களில் 50 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் முதலில் 2200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே மேற்படி கொள்ளை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் கொள்ளையிடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மற்றுமொரு நபரைக் கைது செய்துள்ளதுடன், 50 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். மடிக்கணனி, மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், தையல் இயந்திரம், செல்போன்கள், பல்வேறு மின்னணு பொருட்கள், வீடுகளை உடைக்க பயன்படுத்திய உபகரணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபரும், மணியன் தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us