திருமணம் என்ற பெயரில் விற்பனை: கணவர் குடும்பத்தினரால் மாதக்கணக்கில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 17 வயது சிறுமி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தின் தியோரியா பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் கோரக்பூர் ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணித்த போது அவர் வீட்டை விட்டு தப்பி வந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரை விசாரித்தனர். மிகவும் பயந்த நிலையில் இருந்த அவரிடம் விசாரிப்பதற்காக குழந்தைகள் நல ஆணையத்தில் இருந்து அதிகாரி வரவழைக்கப்பட்டார்.

குழந்தைகள் நல ஆணைய தலைவர் கனீஸ் ஃபாத்திமா அச்சிறுமியிடம் விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறி அதிரவைத்தார்.

17 வயது சிறுமி விசாரணையில் கூறுகையில், “தியோரியாவைச் சேர்ந்த நான் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வந்தேன். எனது விருப்பத்தை மீறி எனது பெற்றோரும், தாய்மாமாவும் கட்டாயப்படுத்தி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பிறகு என்னை கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர். இதை எனது கணவரிடமும், மாமனாரிடமும் தெரிவித்த போது திருமணம் என்ற பெயரில் உன்னை உன் தாய்மாமாவிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம், எனவே அவர்கள் (கணவரின் உறவினர்கள்) சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். இருப்பினும் இதற்கு நான் இதற்கு உடன்பட மறுக்கவே என்னை ஒரு இடத்திற்கு கடத்திச் சென்று சிறை வைத்தனர். அங்கு கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் மாதக்கணக்கில் பல முறை என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர். மேலும் பாலியல் வன்புணர்வு செய்ததை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர். அவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து ஒருவழியாக தப்பித்து தியோரியாவில் உள்ள எனது மாமா வீட்டிற்கு சென்றேன்.

உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கூறியபோது அவர் மறுத்துவிட்டார். என் மாமா எனக்கு உதவ மாட்டார் என தெரிந்து அங்கிருந்து ஏப்ரல் 7ம் தேதி தப்பித்து அடுத்த நாள் ரயிலில் ஏறி தப்பித்தேன்” என கூறினார்.

சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட குழந்தைகள் நல கமிட்டி, இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். தாய் மாமா மற்றும் கணவர் குடும்பத்தினர் மீது புகார் கூறிய அச்சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

Contact Us