கணவரை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த மனைவி2½ ஆண்டுகளுக்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி!

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி அபிராமி (வயது 33). இவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இந்தநிலையில், அபிராமிக்கு தென்காசி அருணாசலபுரம் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் காளிராஜ் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காளிராஜ் திடீரென மாயமானார். இதுதொடர்பாக அபிராமியிடம், காளிராஜின் தாய் உமா கேட்டார். அதற்கு அவர் காளிராஜ் வெளியூர் சென்று இருப்பதாகவும், விரைவில் வந்து விடுவார் என்றும் தெரிவித்தார்.

ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் காளிராஜ் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உமா தென்காசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சம்பவம் நடந்து 2½ ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது போலீசார் சந்தேகத்தின் பேரில் அபிராமியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் தனது கணவர் காளிராஜை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

போலீசாரிடம் அவர் அளித்த திடுக்கிடும் தகவல் வருமாறு:-

திருமணம் முடிந்ததும் காளிராஜ், அபிராமி ஆகியோர் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அப்போது அபிராமி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும், குழந்தைகள் இருப்பதையும் காளிராஜிடம் தெரிவித்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையே, அபிராமிக்கும் அதே பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வரும் மாரிமுத்து (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த காளிராஜ் தனது மனைவி அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அபிராமி, காளிராஜை கொலை செய்ய திட்டமிட்டார். இதுகுறித்து தனது கள்ளக்காதலன் மாரிமுத்துவிடம் அவர் கூறியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு அபிராமி பாலில் மயக்க மருந்து கலந்து காளிராஜிக்கு கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

பின்னர் அபிராமியும், மாரிமுத்துவும் சேர்ந்து கத்தியால் காளிராஜை கொடூரமாக குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது

பின்னர் காளிராஜ் உடலை வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் அருகில் குழிதோண்டி புதைத்துள்ளனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

நேற்று மாலை போலீசார் அபிராமியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அபிராமி காட்டிய இடத்தில் காளிராஜ் உடலை எலும்புக்கூடாக தோண்டி எடுத்தனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் உடலின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமி, மாரிமுத்து, முருகேசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Contact Us