மனைவியின் சடலத்தை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அடக்கம் செய்வதற்காக அல்லாடிய நபரின் சோகம்!

கொரோனாவில் இரண்டாம் அலை நாட்டின் பல அவலங்களை நம் கண்முன்னே காட்டி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமலும், ஆக்சிஜன் வாயு கிடைக்காமலும், ரெம்டெசிவிர் மருத்து கிடைக்காமலும், உயிரிழந்த சடலங்களை எரியூட்ட மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதும் என நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கக் கூடிய காட்சிகள் கண்கலங்கச் செய்வதாய் உள்ளன.

அந்த வகையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறந்து போன தனது மனைவியின் உடலை அடக்கம் செய்யவும், துக்கம் விசாரிக்கக் கூட யாரும் முன்வராத நிலையில், தனி ஒருவராய் இறந்து போன மனைவியின் சடலத்தை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு முதியவர் ஒருவர் சுற்றித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இயலாமை மற்றும் முதுமையின் காரணமாக மனைவியின் சடலத்தை சைக்கிளுடன் சாலையிலேயே சாய்த்துவிட்டு ஓரமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களை உலுக்கி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம் மதியாரு கோத்வாலி பகுதியில் உள்ள அம்பேர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலக்தாரி சிங், இவருடைய 50 வயது மனைவி பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் உமாநாத் சிங் மாவட்ட மருத்துவமனையில் கிசிக்கைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த திங்களன்று அவருடைய மனைவியின் உடல்நிலை மோசமடைந்தது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றி அப்பெண்ணின் உடலை அவருடைய கிராமத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிவைத்தது.

இதனிடையே திலக்தாரி சிங்கின் மனைவியின் மரணத்திற்கு துக்கம் கேட்காமலும், அவருடைய உடலை அடக்கம் செய்யக் கூட கிராமத்தினர் யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கொரோனாவால் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அவருடைய உடலை அடக்கம் செய்யவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கிராம மக்கள்.

இதன் காரணமாக விரக்தியடைந்த முதியவர் திலக்தாரி சிங், தனது மனைவியின் உடலை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அடக்கம் செய்வதற்காக பல மணி நேரம் அலைந்து திரிந்துள்ளார். ஒரு கட்டத்தில் மேலும் சைக்கிளை நகர்த்த முடியாமல் சாலையிலேயே அவர் சைக்கிளுடன் தனது மனைவியின் சடலத்தை போட்டுவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தார்.

இதனையடுத்து இது குறித்து அறிந்த உள்ளூர் காவல்துறையினர் திலக்தாரி சிங்கின் மனைவியின் உடலை அவர்களே அடக்கம் செய்ய உதவியுள்ளனர்.

ஏற்கனவே நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மனித நேயமின்றி செயல்படும் சக மனிதர்களின் செயல் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

Contact Us