7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர்!

பீகாரின் சுல்தான்கஞ்ச் நகரில் வசித்து வருபவர் உத்தம் மண்டல். இவர் ககாரியா மாவட்டத்தில் வசித்து வந்த சப்னா குமாரி என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அமைதியாக சென்று கொண்டு இருந்த இவர்களது வாழ்வில் உறவினர் வடிவில் புயல் வீச தொடங்கியது. அதே பகுதியில் வசித்து வந்த தன்னை விட வயது குறைந்த ராஜூ குமார் என்பவரை சப்னா சந்தித்து உள்ளார். சந்தித்த வேளையில் தனது கணவர், குழந்தைகளை பற்றி அவர் சிந்திக்கவே இல்லை.

அவற்றை எல்லாம் மறந்து விட்டு ராஜூ மீது சப்னாவுக்கு காதல் வந்துள்ளது. இந்த விவகாரம் உத்தமுக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். சப்னாவின் பெற்றோர், உற்றார் கூட சப்னாவை பேசி வழிக்கு கொண்டு வர முயற்சித்தனர்.

ஆனால், சப்னா தனது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே சண்டை வந்துள்ளது. இறுதியில் சப்னாவின் விருப்பம்போல் ராஜூவை திருமணம் செய்ய உத்தம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்காக அருகிலுள்ள துர்க்கை கோவில் ஒன்றில் திருமண நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். உத்தம் மற்றும் சப்னாவின் குடும்பத்தினர் முன்னிலையில் சப்னாவுக்கு 2வது திருமணம் நடந்துள்ளது. இதன்பின் மணமக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு உத்தம் வாழ்த்து தெரிவித்தும் உள்ளார்.

எனினும், தனது மனைவி வேறு யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதனை கண்டு உத்தம் மண்டல் கண் கலங்கி உள்ளார்.

இந்த செய்தி அந்த பகுதியில் பரவி அதனை காண மக்கள் கோவிலுக்கு படையெடுத்து உள்ளனர். சப்னா தனது குழந்தைகள் தன்னுடன் இருக்க மறுத்து விட்டார். இதனால் உத்தம் அவர்களை அழைத்து கொண்டு சென்று விட்டார்.

சர்வகாலமும் சந்தேகத்துடனும், அச்சத்துடனும் வாழ்வதற்கு பதிலாக சந்தேகம் தொலைந்த நிம்மதியுடன் சென்ற உத்தமின் செயலை கண்டு அங்கிருந்தவர்கள் வியந்தனர்.

Contact Us