இந்தியாவை போன்ற நிலை ஏற்படும்..இலங்கையில் எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவின் நிலையே இலங்கைக்கும் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர்.இதன்மூலம் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. எனவே அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏதேனுமொரு வகையில் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே இந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் அவர்கள் சார்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியத்துவமுடையதாகும்.

வெள்ளியன்று 11 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கைக்குள்ளும் கொவிட் பரவலானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது. தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் கடந்த நாட்களில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலை ஏற்படுமாயின் ஒரு தடுப்பூசியையேனும் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது என்றார்.

Contact Us