துணை முதல்வர் பதவியை உருவாக்க பாஜக தீவிரம்..

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களை பாஜக பெற்றது. 16 இடங்களில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களை பெற்றன.

30 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு புதுச்சேரி சட்டசபையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இருப்பதால் ரங்கசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைய இருக்கிறது. இதற்கான ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் வரும் 7 ம் தேதி ரங்கசாமி பதவி ஏற்பார் என தெரிகிறது.

சபாநாயகர் மற்றும் 3 அமைச்சர் பதவிகளை என்.ஆர்.காங்கிரஸ் வைத்து கொள்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் மூத்த உறுப்பினர்களான தேனீ ஜெயக்குமார், ராஜவேலுலட்சுமிநாரயணன், திருமுருகன் ஆகியோர் இப்பதவியை பெறுவார்கள் என தெரிகிறது.

அதே நேரத்தில் புதுச்சேரியில் முதல்முறையாக துணை முதல்வர் பதவியை உருவாக்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது. அப்பதவியில் நமச்சிவாயம் அமர்த்தப்படுகிறார். பாஜகவிற்கு துணை சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர் பதவிகள் வழங்கப்படுகிறது. செல்வம், ஜான்குமார், கல்யாணசுந்தரம் சாய் சரவணன் ஆகியோர் இப்பதவியை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாஜக நேரடியாக 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்தது. இதே போல் உடனடியாக 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்க மேலிட பொறுப்பாளர் சுரானா ஈடுபட்டுள்ளார். இதற்காக 9 பேர் பட்டியல் கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் தினத்திலேயே அவர்கள் பதவி ஏற்பார்கள் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்டமன்றத்தில் 33 எம்எல்ஏக்கள் இருப்பதை சுட்டி காட்டி மேலும் ஒரு அமைச்சர் பதவியை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகத்தை பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சரான அர்ஜூன் மேக்வால் இறங்கியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துணை முதல்வர், கூடுதல் அமைச்சர், நியமன எம்எல்ஏக்கள் விவகாரங்களால் பாஜக அமைச்சர்கள் பதவி ஏற்கும் தேதி தள்ளி போகும் என தெரிகிறது. மேலும் புதுச்சேரியில் 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் அங்காளன்,சிவசங்கரன்,கொல்லபள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் பாஜகவையும், 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் பிரகாஷ்குமார் ,P.R.சிவா, நேரு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவளித்துள்ளனர்.

Contact Us