22 பேரின் உயிரை காப்பாற்றிய நடிகர் சோனு சூட் !

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு லட்சங்களில் ஏற்பட்டு வருவதால் பல்வேறு மாநிலங்களில் சாதனை எண்ணிக்கையில் தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது, இதன் காரணமாக சுகாதார கட்டமைப்பு ஸ்தம்பித்துள்ளது. மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்ஸிஜன் கேட்டு அவலக் குரல்கள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ஆக்ஸிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர் என்ற அபயக் குரல் கேட்டு பாலிவுட் நடிகர் சோனு சூட்துரிதமாக செயல்பட்டு இரவு முழுவதும் போராடி, அலைந்து அம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததன் பயனாக அம்மருத்துவமனையில் 22 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

நடிகர் சோனு சூட்

கடந்த திங்கட்கிழமை இரவில் பெங்களூருவில் உள்ள ARAK மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மேலும் 22 பேர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடி வருவதாகவும் எலஹங்கா சரக காவல் ஆய்வாளர் சத்யநாராயணன், தனக்கு தெரிந்த நடிகர் சோனு சூட்டின் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சோனு சூட்டின் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும், நடிகர் சோனு சூட்டும் உடனடியாக செயலில் இறங்கினர். தங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு ஆக்ஸிஜன் கேட்டுள்ளனர். இதனடிப்படையில் அன்று நள்ளிரவு ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 15 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சோனு சூட்டின் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து அம்மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் சோனு சூட் தெரிவித்ததாவது, “இது முற்றிலும் ஒரு கூட்டு முயற்சி. நம் சக மனிதர்களும் உதவியுள்ளனர். காவல் ஆய்வாளர் சத்யநாராயணணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் உடனடியாக அந்த தகவலை சரிபார்த்துவிட்டு நாங்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே களத்தில் இறங்கினோம். அந்த இரவு எதைப்பற்றியும் சிந்திக்காமல் எங்கள் குழுவினர் அம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். சிறிதளவு தாமதம் ஏற்பட்டிருந்தாலும் பல குடும்பத்தினர் தங்களின் அன்பானவர்களை இழந்திருக்கக்கூடும்.

பலரின் உயிரை காப்பாற்றியதில் உதவியாக இருந்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது குழுவினரின் செயல் இது போன்று தொடர்ந்து பிறருக்கு உதவி செய்ய என்னை ஊக்கப்படுத்தி வருகிறது. அவர்களின் வாழ்வின் என்னால் முடிந்த மாற்றத்தை உருவாக்க விழைகிறேன். எனது குழுவினரை கண்டு பெருமை கொள்கிறேன். போலீசாரும் ஒரு கட்டத்தில் களத்தில் இறங்கி உதவி தந்தனர். குறிப்பிட்ட மருத்துவமனையில் இருந்து ஒரு நோயாளியை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்த போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஓட்டுனர் கிடையாது, ஆனால் போலீசார் ஒருவர் தான் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் நோயாளியை சேர்த்தார்” என்று சோனு சூட் தெரிவித்தார்.

Contact Us