கொரோனாவுக்கு மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா மற்றும் அது தொடர்பான பயம், மன அழுத்ததால் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

மகாராஷ்டிர் மாநிலம் மும்பையின் கண்டிவாலி பகுதியை சேர்ந்தவர் ஜிஜேந்திர பஹ்டிகர் (36). இவருக்கு மாதவி என்ற மனைவியும், 6 வயது நிரம்பிய மகளும் இருந்தனர்.

இதற்கிடையில், ஜிஜேந்திரரின் மனைவி மாதவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஜிஜேந்திர பஹ்டிகர் வேறு ஒரு பெண்ணை மறுதிருணம் செய்து கொண்டார். ஆனால், தனது முதல் மனைவி மாதவி உயிரிழந்ததை நினைத்து அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதை வெளிக்காட்டாமல் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்வது உள்ளிட்ட தனது வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜிஜேந்திர பஹ்டிகர் குழந்தையுடன் கண்டிவாலி பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள கௌவ்தன் பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் தங்க செல்வதாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து உறவினர்களும், பக்கத்து வீட்டின் அருகில் வசித்தவர்களும் ஜிஜேந்திர பஹ்டிகரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், ஜிஜேந்திரன் தனது செல்போனை எடுக்கவே இல்லை.

இதனால், சந்தேகமடைந்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து கௌவ்தன் பகுதியில் உள்ள ஜிஜேந்திராவின் வீட்டிற்கு சென்ற போலீசார் வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர். உடனடியாக, அந்த வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு ஜிஜேந்திர பஹ்டிகரும் அவரது 6 வயது குழந்தையும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் தூக்கில் தொங்கிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

ஜிஜேந்திர பஹ்டிகர் தனது 6 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தானும் தூக்கில் தொங்கியுள்ளார். மனைவி மாதவி உயிரிழந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜிஜேந்திர தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார் என்பது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட ஜிஜேந்திர பஹ்டிகர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் அவரது தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். அந்த கடிதத்தில், வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்தேன். ஆனால், என்னால் முடியவில்லை என்று எழுதியுள்ளார். மேலும், தனது மகளை விட்டுச்செல்ல விரும்பாததால் அவரையும் தன்னுடன் கூட்டிச்செல்வதாக எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன உளைச்சல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ‘104’ என்ற அவசர மருத்துவ உதவி மைய எண்ணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us