தடபுடல் விருந்து; திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் பலி; நடந்தது என்ன?

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவாணி என்ற 19 வயது இளம்பெண்ணுக்கும் தண்டூர் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது.

திருமண சந்தோசத்தில் கொரோனா பற்றிய சிந்தனையே யாரிடமும் இல்லை. உறவினர் வீடுகளுக்கு எல்லாம் விருந்துக்கு சென்று வந்த புதுமண தம்பதி கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு சென்று அபிஷேகம் செய்துவிட்டு இருவரும் ஜோடியாக வீடு திரும்பி இருக்கின்றனர்.

புது மணப்பெண் ஸ்ரீவாணி திடீரென மயக்கம் அடைந்து தரையில் சாய்ந்தார். அவர் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுது நேரத்தில் ஸ்ரீவாணி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணப் பந்தலை கழற்றும் முன்பாகவே அதே பந்தலில்தான் இளம்பெண்ணின் இறுதி சடங்கும் செய்யப்பட்டது. இதனால் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த ஸ்ரீவாணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆதலால் ஸ்ரீவாணிக்கு திருமணத்திற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு ‘நெகட்டிவ்’ என முடிவு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம் பார்த்த சாரதிபுரத்தைச் சேர்ந்த விஜயாவிற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த மாத இறுதியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வழக்கம்போல் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு விருந்துக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் விஜயாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனா வைரஸ்

இருப்பினும் புதுப்பெண் விஜயாவின் நிலைமை மோசமானது. கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். திருமணம் முடிந்து 20 நாட்கள் கூட ஆகாத நிலையில் புதுப்பெண் விஜயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுப்பெண்கள் இருவர் திருமணமான ஓரிரு வாரங்களிலேயே மரணமடைந்த சம்பவத்தால் மாப்பிள்ளை வீட்டாருக்கு மட்டுமல்ல மணமக்களுக்கு விருந்து வைத்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து திருமண விழாவில் குறைந்த அளவு நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென தெரிவித்தாலும் அரசின் நிபந்தனைகளை மீறி அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி கொரோனா விழிப்புணர்வின்றி உறவினர்கள், நண்பர்கள் கூட்டத்துடன் திருமணம் செய்து கொள்வதே இது போன்ற விபரீத உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

Contact Us