வயிற்றில் குத்திய கத்தி உடன் காவல்நிலையம் வந்த இளைஞர் – இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயிற்றில் குத்தப்பட்ட கத்தியோடு முகத்தில் வழிந்த ரத்தத்தோடும் காவல்நிலையம் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வயிற்றில் குத்திய கத்தியோடு காவல்நிலையம் நோக்கி ஓடியுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கும் காவல்நிலையத்துக்கு 500 மீட்டர் தான் தொலைவு என்பதால் வயிற்றில் குத்தப்பட்ட கத்தியோட காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துவிடலாம் என விரைந்துள்ளார். இதற்கிடையில் அந்த இளைஞரின் நண்பர் அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காவல்நிலையம் வந்தடைந்துள்ளார்.

இளைஞரின் நிலையை கண்ட காவலர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் இளைஞர் தாக்கியதாக 9 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், ‘‘முன்விரோதம் காரணமாக இந்தச்சம்பவம் நடந்துள்ளது. திறந்தவெளி மைதானத்தில் வைத்து இளைஞரை தாக்கியுள்ளனர். வயிற்றில் குத்தப்பட்ட கத்தியோட சில தூரம் ஓடி வந்துள்ளார். அதன்பின்னர் நண்பர் ஒருவர் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துவந்துள்ளார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 9 நபர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

Contact Us