தி.மு.க. எம்.பி. பெயரில் போலியான பாஸ் எடுத்து காரில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த டாக்டர்!

தி.மு.க. எம்.பி. பெயரில் காரில் போலியான பாஸ் ஒட்டி, இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சதுப்பு நிலத்தை ஒட்டி புதர்போல் செடிகள் வளர்ந்து, மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து இருக்கும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இங்கு திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி இரவு 9 மணியளவில் புதரை ஒட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது ரோந்து பணியில் இருந்த பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ், சொகுசு கார் அருகே சென்று பார்த்தார். அப்போது காரில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் உல்லாசத்தில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

போலீசாரை கண்டதும் காரில் இருந்த இளம்பெண் கீழே இறங்கி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார். காரில் இருந்த வாலிபரிடம் விசாரித்தபோது, தான் தி.மு.க. எம்.பி. ஒருவருக்கு நெருக்கமானவர் என்றும், காரில் ஒட்டி இருந்த எம்.பி.யின் கார் பாஸ் ஒன்றையும் அவரிடம் காட்டியதாக தெரிகிறது. விசாரணைக்கு பிறகு அவரை இன்ஸ்பெக்டர் அனுப்பிவிட்டார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ், அந்த வாலிபர் கூறிய தி.மு.க. எம்.பி.யை தொடர்பு கொண்டு கார் பாஸ் குறித்து விசாரித்தார். அதற்கு அவர், தான் அதுபோல் யாருக்கும் கார் பாஸ் தரவில்லை என கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர், போலியான பாசை வைத்து காரில் தப்பிச் சென்ற வாலிபர் குறித்து விசாரித்தார்.

விசாரணையில் அவர், மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சேர்ந்த ஷியாம் கண்ணன் (வயது 27) என்பதும், பல் டாக்டர் என்பதும் தெரியவந்தது. ராஜகோபாலன் என்பவரிடம் இருந்து எம்.பி. பாசை வாங்கியதாகவும், ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் எம்.பி. பாஸ் வைத்திருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஷியாம் கண்ணன் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தி.மு.க. எம்.பி.யின் அனுமதி இல்லாமல் போலியாக பாஸ் எப்படி தயாரிக்கப்பட்டது?. இதில் தொடர்புடைய நபர்கள் யார்? பாஸ் வழங்கிய ராஜகோபாலன் யார்? என பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Contact Us