கொரோனா நிதிக்காக கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொடுத்த ஏழைப் பெண்- சௌமியாவுக்கு இரண்டே நாளில் வேலை கிடைத்தது !

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றிருந்தார். சேலத்திலிருந்து மேட்டூருக்கு காரில் பயணம் செய்தபோது, வழியில் நின்றிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுவோடு தனது கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிதிக்கு என்று குறிப்பிட்டு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்த்தவர்தான் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் சௌமியா. முதலின் இந்த தங்கச் சங்கிலி முதல்வர் நிதிக்காக நான் கொடுக்கிறேன். மேலும் எனது கோரிக்கை இதுதான். எனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கோரி இருந்தார்.

ஜூன் 13ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் ‘மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளதோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. என்று குறிப்பிட்டார். பொன் மகளுக்கு விரைவில், அவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார். சொல்லி வைத்தால் போல செளமியா கோரிக்கை மனுகொடுத்த இரண்டே நாள்களில்,(15.06.2021) அமைச்சர் செந்தில் பாலாஜியும், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகமும் செளமியாவின் வீட்டிற்கே சென்று வேலை வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கியுள்ளனர்.

செளமியா வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள JSW Steel நிறுவனத்தில் செளமியாவுக்கு அலுவலக பணிக்கான வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மாத சம்பளமாக 17,000 ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தொலைபேசி வாயிலாக செளமியாவிடம் பேசி வாழ்த்தும் தெரிவித்தார். இதுவரை வெறும் 4,000 ரூபா வருமானத்தோடு மட்டுமே கஷ்டத்தில் இருந்த குறித்த பெண் இன்று வேலை கிடைத்து மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். முதலமைச்சர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Contact Us