முகக்கவசம் அணியாமல் வந்தவரை துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்; பெரும் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வங்கிக்கு வந்தவரை பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய ஆயுதமாக முகக்கவசம் பார்க்கப்படுகிறது. எனவே, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறன. அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் எப்போதும் முகக்கவசத்துடனேயே எங்கேயும் செல்கின்றனர். இருப்பினும், பொதுமக்களில் 50 சதவீதம் பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை அபராதம் விதிக்கும் நிகழ்வும் அவ்வப்போது நடைபெற்றுவருகிறது.

பல இடங்களில் முகக்கவசம் அணியாததை கேள்வி எழுப்பிய காவல்துறை, வங்கி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் காவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படும் சூழலும் பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியும் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிர்ச்சியளிக்கும்வகையில் முடிவு பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பைரேலி மாவட்டத்திலுள்ள வங்கிக்கு வந்த பயனாளர் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார்.

அதன்காரணமாக அவருக்கும், வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியுள்ளது. அதனால், ஆத்திரமடைந்த வங்கிக் காவலர் துப்பாக்கியால் பயனாளரைச் சுட்டுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்டவர் ரயில்வே ஊழியர் ஆவர். அவர் பெயர் ராஜேஷ்குமார். அவருடன் அவரது மனைவியும் வங்கிக்கு வந்துள்ளார். சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த கணவரைப் பார்த்து அதிர்யடைந்த மனைவி கதறி அழுதார். காயமடைந்த ராஜேஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர், தற்போது அபாயக் கட்டத்தைக் கடந்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்டது குறித்து தெரிவித்த வங்கிக் காவலர், ‘அவர் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தார். நான், அவரைக் கூப்பிட்டு முகக்கவசம் அணிய வலியுறுத்தினேன். அதனால், அவர் முகக்கவசம் அணிந்தார். ஆனால், அவரை என்னைத் திட்டத்தொடங்கினார். எங்களுக்குள் வாக்குவாதம் ஆனது. அவரும், நானும் ஒருவொருக்கொருவர் தள்ளிக்கொண்டோம். அப்போது எதிர்பாரதவிதமாக துப்பாக்கி சுட்டுவிட்டது’ என்று தெரிவித்தார்.
வங்கிக் காவலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Contact Us