கள்ளக்காதலுக்கு பெற்ற மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தந்தை!

கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததால் பெற்ற மகள்களையே தந்தை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததாக கூறி அவரை கிராம மக்கள் அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ளது கலர்பூல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 8 மற்றும் 6 வயது சகோதரிகள் இருவர் அவர்களுடைய வீட்டில் உள்ள முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அபயக் குரல் எழுப்பியிருக்கின்றனர். சிறுமிகளின் அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவர்களின் பாட்டி, சிறுமிகள் மின்சார வயர் மீது கால் வைத்தது தெரியவந்ததால், மின் சப்ளையை துண்டிக்க முயற்சித்திருக்கிறார்.

இருப்பினும் அதற்குள் சிறுமிகள் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற போது வீட்டிற்குள் யாரும் இல்லை என தெரியவந்தது. இதற்கிடையே அங்கு கிராம மக்களும் திரண்டு வந்தனர்.

சிறுமிகள் மின்சார வயரை தெரியாமல் மிதிக்கவில்லை என்றும் வேண்டுமென்றே திட்டமிட்ட கொலை செய்திருப்பதாகவும் சிறுமிகளுடைய தாயார் தெரிவித்தார். மேலும், தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பு இருந்ததாகவும், அதனை கைவிடுமாறு நான் பல முறை எடுத்துக்கூறியும் அவர் கைவிடுவதாக இல்லை,

எனவே சிறுமிகள் தனக்கு தொந்தரவாக இருப்பதாக கருதி அவர்களை பெற்ற மகள்கள் என்றும் பார்க்காமல் கொலை செய்திருக்க வேண்டும் என அவரது மனைவி கதறி அழுதார்.

அந்த நேரம் பார்த்து சிறுமிகளின் தந்தை அங்கு வந்த போது ஆத்திரத்தில் இருந்த கிராம மக்கள் அவரை அடிக்கத் தொடங்கினர். சிறுமிகளை கொலை செய்ததாக கூறி அவரை புரட்டி எடுத்தனர்.

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுமிகளின் தந்தையை கிராமத்தினர் காவலர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால் தன்னுடைய மனைவி வேண்டுமென்றே தன்னை சிக்க வைத்திருப்பதாக அவர் காவலர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது குடும்ப வன்முறை மற்றும் கொலை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் சிறுமிகளின் உயிரிழப்புக்கான காரணத்தை விளக்குமாறு மின்சார வாரியத்திடம் கேட்டுள்ளனர்.

சிறுமிகளை தந்தையே கொலை செய்ததாக கூறப்படும் இந்த விவகாரம் மேற்குவங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us