நண்பர்களால் மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கொடூர கணவர்!

திருமணமாகும் பெண்களுக்கு, மாப்பிள்ளை வீட்டாரால் வரதட்சணை கேட்டு இழைக்கப்படும் அநீதிகள் ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கவே செய்கின்றன. சமீபத்தில் கேரளாவில் 23 வயது இளம்பெண் விஸ்மயா, வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி வீட்டின் குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு அடுத்தடுத்து பல குடும்ப வன்முறை தொடர்பான புகார்களையும் வெளியே கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கிடைக்காத விரக்தியில் திருமணமான இளம் பெண் ஒருவரை, அவரின் கணவரே நண்பர்களை வைத்து பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கொடூரம் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் பசேரி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு எனது கணவரும், அவருடைய வீட்டாரும் கூடுதலாக வரதட்சணை பெற்று வருமாறு என்னை துன்புறுத்தி வந்தனர்.

ஒரு கட்டத்தில் என்னுடைய பெற்றோரால் கூடுதல் வரதட்சணை தர இயலாது என்பதை தெரிந்து கொண்ட எனது கணவர், என்னையும், எனது வீட்டாரையும் பழிவாங்க விபரீத முயற்சியை கையாண்டார்.

கடந்த சனிக்கிழமையன்று எனது கணவர் அவருடைய நண்பர் ஒருவரை கூட்டி வந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்தார். நான் சுதாரிப்பதற்குள் மறுநாள் அவருடைய மற்றொரு நண்பரை கூட்டி வந்து என்னை மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்ய வைத்தார். எனது கணவரும், அவரது நண்பரும் என்னுடைய பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி என்னை சித்ரவதை செய்தனர்.

பின்னர் இது குறித்து எனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வந்து என்னை மீட்டனர். என காவல்நிலையத்தில் அந்த பெண் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறை தங்களை தேடுவதை அறிந்து தலைமறைவாகி உள்ளனர். இந்த வழக்கை டி.எஸ்.பி ஒருவர் விசாரித்து வருவதாகவும், போலீஸ் குழு ஒன்று தலைமறைவாக இருப்போரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Contact Us