மினி பாகிஸ்தான்’ என ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: லைக்ஸுக்காக இளைஞர் செய்த விபரீதம்!

ஃபேஸ்புக்கில் தன் சொந்த கிராமத்தை ‘மினி பாகிஸ்தான்’ என வர்ணித்து போஸ்ட் போட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அம்ரேதி கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதாகும் அக்பர் கான். இவர் ஓமனில் உள்ள எண்ணெய் வயல்களில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.

அக்பர் கான், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ‘அம்ரேதியை பாருங்கள் – இது ஒரு மினி பாகிஸ்தான்’ என தலைப்பிட்டு தன்னுடைய கிராமத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். விரைவாகவே அக்பர் கானின் இந்த போஸ்ட் வைரலாக பரவியது. அதே நேரத்தில் இந்திய கிராமத்தை இப்படி மினி பாகிஸ்தான் என வர்ணித்ததற்காக அவருக்கு கண்டனங்களும் எழுந்தன.

உள்ளூரைச் சேர்ந்தவர்கள், அண்டை கிராமத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் என அக்பர் கானின் செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார்கள் அளித்தனர்.

புகார்களை அடுத்து இளைஞர் அக்பர் கானை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுவது உள்ளிட்ட ஐடி சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, தான் சாதாரணமாகத் தான் அப்படி பதிவிட்டேன், எங்கள் ஊரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருவதால் எங்கள் கிராமத்தை மினி பாகிஸ்தான் என்றே பிறர் அழைப்பார்கள் என்று அவர் விளக்கம் தந்தார்.

இதனையடுத்து அண்டை கிராம மக்களை சந்தித்த காவல்துறையினர் இது போன்று அம்ரேதி கிராமத்தை குறிப்பிடக்கூடாது என எச்சரித்தனர்.

கடந்த மே மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான் கான் என்ற நபர் பாகிஸ்தானை போற்றி புகழும் வகையிலான பாடல்களை ஒலிபரப்பி, மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியதற்காக கைதானார். அவருடைய நண்பர்கள், ஆதரவாளர்கள் சிலரும் தேசிய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Contact Us